ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
‘காந்தாரா’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, அதன் 2-ம் பாகம் தயாராகியுள்ளது. அக்டோபர் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி நடித்துள்ளார். ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இதனை தயாரித்துள்ளது. ‘காந்தாரா: சாப்டர் 1’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கு. இந்தி, மலையாளம், பெங்காலி, ஆங்கிலம் ஆகிய ஏழு மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது.
ட்ரெய்லர் எப்படி? – முந்தைய பாகத்தின் இறுதியில் ரிஷப் ஷெட்டி மாயமாக மறைவதுடன் படம் நிறைவடையும். தன் தந்தை அப்படி மறைந்ததற்கு பின்னால் இருக்கும் ரகசியத்தை அவரது மகன் தெரிந்து கொள்ள விரும்புவதாக ட்ரெய்லர் தொடங்குகிறது. ‘காந்தாரா’வின் வரலாறு வாய்வழிக் கதை வழியாக சொல்லப்படுகிறது.
கொடுங்கோல் ஆட்சி செய்யும் அரசன், அவனுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டும் நாயகன், கூடவே ஆன்மீகம், காதல், ஆக்ஷன் என ஒரு பான் இந்தியா படத்துக்கான அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கி அமைந்துள்ளது ட்ரெய்லர். அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை கவனம் ஈர்க்கிறது. ‘காந்தாரா’ முதல் பாகத்தின் பலமே அதன் நேட்டிவிட்டியும், இயல்பான கதையோட்டமும் தான். இந்த படத்தில் பிரம்மாண்டம் தூக்கலாக இருந்தாலும், பான் இந்தியா சமரசங்களை தாண்டி அதே நேட்டிவிட்டியும் இயல்பும் இருக்கும் என்று நம்பலாம். ட்ரெய்லர் வீடியோ: