துபாய்: நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டு முறை பாகிஸ்தான் அணியை இந்தியா அணி வீழ்த்தி உள்ளது. இந்நிலையில், இனி பாகிஸ்தான் போட்டியாளரே அல்ல என இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அனல் பறக்கும். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மற்றும் அரசியல் சூழல் காரணமாக கடந்த 2013-க்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேரடி தொடர்களில் விளையாடுவது இல்லை. ஐசிசி நடத்தும் தொடர் மற்றும் ஆசிய கோப்பையில் மட்டுமே இரண்டு அணிகளும் பலப்பரீட்சை செய்கின்றன.
அதற்கு முன்பு வரை இந்திய அணி பாகிஸ்தான் செல்வதும், பாகிஸ்தான் அணி இந்தியா வந்து கிரிக்கெட் விளையாடி உள்ளன. பாகிஸ்தானில் தோனி, யுவராஜ், சேவாக், சச்சின் உள்ளிட்ட இந்திய வீரர்கள் பலர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அதேபோல ஷஹீத் அஃப்ரிடி, இன்சமாம், யூனுஸ் கான், ஷோயப் அக்தர் உள்ளிட்ட வீரர்களும் இந்தியாவில் அற்புத ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
அவர்களுக்கு பிறகு கோலி, ரோஹித் உள்ளிட்ட அடுத்த தலைமுறையை சேர்ந்த வீரர்களும் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடி உள்ளனர். இப்போது அவர்களும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். பாகிஸ்தான் அணியிலும் பாபர் அஸம், ரிஸ்வான் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இல்லாமல் தான் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.
இந்நிலையில், சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்திய பின்னர் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தது. “இரண்டு அணிகள் 15 முதல் 20 ஆட்டங்கள் வரை விளையாடி. அதில் இரண்டு அணிகளும் 7-7 அல்லது 8-7 என்ற நிலையில் இருந்தால்தான் அவர்கள் இணையான போட்டியாளர்கள் (Rivalry). 13-0, 10-1 என இருந்தால். எனக்கு அது நிலை குறித்து தெரியவில்லை. ஆனால், இனி இது இணையான போட்டியாளர்களே அல்ல. அது குறித்து கேள்வி கேட்பதும் கூடாது” என அவர் தெரிவித்தார்.
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் உடனான இரண்டு போட்டியிலும் இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.