சென்னை: ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ள நிலையில், அடிப்படை விலையை குறைக்குமாறு ஆவின் நிர்வாகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலான இன்று ‘ஆவின் பால்’ நிறுவனம் அடிப்படை விலையை குறைக்காமல், தள்ளுபடி அளிக்கிறோம் என்று கூறியிருப்பது முழுமையான மோசடி மட்டுமல்ல, மக்கள் விரோத செயலும் கூட. மக்கள் முதுகில் குத்துகிற இந்த மோசடியானது பாலில் விஷம் கலப்பதற்கு ஈடானது. அரசே இதுபோன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அடிப்படை விலையை குறைக்காமல், அதிகபட்ச விலையை குறைக்காமல் தள்ளுபடி அளிக்கிறோம் என்று சொல்வது வரத்தக தந்திரம் அல்ல, மக்கள் மீதான சர்வாதிகார நடவடிக்கை. தமிழகத்தில் விற்பனையாகும் அனைத்து பொருட்களும் வரி குறைப்போடு விற்பனை செய்யப்படுகிறதா என்று உத்தரவிட வேண்டிய நிலையில் உள்ள மாநில அரசே தன் நிரவாகத்தில் உள்ள பொருளின் விலையை குறைக்காது இருப்பது நவீன கால் மோசடியே.
உடனடியாக முதல்வர் ஸ்டாலின் ஆவின் நிர்வாகத்தை அடிப்படை விலையை குறைக்க உத்தரவிட வேண்டும். இல்லையேல், திராவிட மாடல் அரசு மக்கள் விரோத, ஜனநாயக விரோத, தமிழர் விரோத அரசு என்றே மக்களால் புறந்தள்ளப்படும்” என்று நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.