மதுரை: தமிழகத்தில் பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க தமிழ்நாடு பட்டாசு தொழில் கழகம் உருவாக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த செல்வகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: “தமிழகத்தில் விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் 450 பதிவு செய்யப்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இந்த ஆலைகள் மூலம் நேரடியாக 40 ஆயிரம் பேரும், மறைமுகமாக ஒரு லட்சம் பேரும் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலான பட்டாசு ஆலைகளில் வெடி மருந்து சட்ட விதிகள் மற்றும் தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் விதிமுறைகளை பின்பற்றப்படுவதில்லை.
ஒரு பட்டாசு ஆலைக்கும் இன்னொரு பட்டாசு ஆலைக்கும் குறிப்பிட்ட அளவு இடைவெளி இருக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. இந்த நிபந்தனைகளை பின்பற்றாமல் விபத்து நிகழ்ந்தால் பாதிப்பு பெரியளவில் ஏற்படும் வகையில் அருகருகே பட்டாசு ஆலைகள் அமைக்கின்றனர். இதனால் பட்டாசு ஆலைகளின் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. கடந்தாண்டிலிருந்து 2025 ஆகஸ்ட் மாதம் வரை 77 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 77 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 2000-ம் ஆண்டிலிருந்து 331 பட்டாசு ஆலை விபத்துக்களில் 268 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கவும், பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்புக்காகவும் தமிழ்நாடு பட்டாசு தொழில் கழகம் உருவாக்கவும், பட்டாசு ஆலை விபத்துகளை தடுப்பது மற்றும் சட்டவிரோத பட்டாசு உற்பத்தியை தடுக்க ஒருங்கிணைந்த கொள்கை வகுக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த மனுவை ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள பட்டாசு ஆலைகளை முறைப்படுத்துதல் தொடர்பான மனுவுடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியிலிட உத்தரவிட்டு விசாரணையை செப்.23-ம் தேதிக்கு (நாளை) தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.