கோவை: “ஈஷாவின் கிராமோத்சவம் தொடர், நம் நாட்டை விளையாட்டில் வல்லரசாக்கும் மிகப் பெரிய முன்னெடுப்பு” என கோவையில் நடந்த ஈஷா கிராமோத்சவத்தின் பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஈஷா சார்பில் 17-வது கிராமோத்சவம் விளையாட்டுத் திருவிழா, கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள 183 இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஆண்களுக்கு கைப்பந்து போட்டிகளும், பெண்களுக்கு த்ரோபால் போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5,472 அணிகள் மூலமாக 12 ஆயிரம் பெண்கள் உட்பட 63 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். கிளஸ்டர் மற்றும் மண்டல அளவிலான போட்டிகளைத் தொடர்ந்து இறுதிக் கட்டப் போட்டிகள் இன்று நடைபெற்றது.
கோவை ஈஷா ஆதியோகி வளாகத்தில் நடைபெற்ற இறுதிக்கட்ட போட்டியில் 24 கைப்பந்து அணிகளும், 18 த்ரோபால் அணிகளும் பங்கேற்றன. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா கைப்பந்து போட்டிகளும் நடத்தப்பட்டன. அதில், ஆண்களுக்கான கைப்பந்து இறுதிப் போட்டியில் சேலத்தை சேர்ந்த உத்தம சோழபுரம் அணியும், கர்நாடகாவை ஹெகதிஹள்ளி அணியும் முதல் இரண்டு இடங்களை பிடித்தது.
பெண்களுக்கான இறுதிப் போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த படகணுரூ கிராம அணியும், கோவையை சேர்ந்த தேவராயபுரம் அணியும் முதல், இரண்டு இடங்களை பிடித்தன. பாரா கைப்பந்து போட்டியில் கிருஷ்ணகிரி அணியும், கன்னியாகுமரி அணியும் முதல், இரண்டு இடங்களை பிடித்தனர். கைப்பந்து மற்றும் த்ரோபால் போட்டிகளில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகளுக்கு முறையே ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம் பரிசத் தொகையாக வழங்கப்பட்டன. மொத்த பரிசுத்தொகையாக ரூ.67 லட்சம் வழங்கப்பட்டது.
ஈஷா நிறுவனர் சத்குரு முன்னிலையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, பாரா ஒலிம்பிக் வீராங்கனை பவினா படேல் ஆகியோர் கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.
தொடர்ந்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசும்போது, ”ஈஷா கிராமோத்சவம் மூலம் சத்குருவின் முயற்சிகள், கிராமங்களில் விளையாட்டு திறன்களை மேம்படுத்துவது மட்டுமில்லாமல், நம் நாட்டை சுயசார்பு மற்றும் விளையாட்டில் வல்லரசாக்கும் நோக்கில் எடுக்கப்படும் மிகப்பெரிய முன்னெடுப்பு ஆகும். கிராமப்புறங்களில் இருக்கும் திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளம் காண சத்குரு உதவ வேண்டும். எங்களுக்கு இதில் வழிகாட்ட ஈஷா அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும்” என்று மன்சுக் மாண்டவியா கூறினார்.
பின்னர் விழாவில் பேசிய சத்குரு, ”நம் மக்கள் உற்சாகமான, வலிமையான, துடிப்பான, திறமையான, ஊக்கமுள்ளவர்களாக இருந்தால், நாம் இந்த பூமியிலேயே மிகப் பெரிய அற்புதமான சமூகமாக இருக்கலாம். ஈஷா கிராமோத்சவத்தை 2028ம் ஆண்டுக்குள் நாட்டின் 28 மாநிலங்களிலும் நடத்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்” என்று கூறினார்.
இவ்விழாவின் ஒரு பகுதியாக வண்ண கோலப்போட்டி, சிலம்பப் போட்டி, கிராமிய சமையல் போட்டி, வேடிக்கை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.