சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று இரவு சந்தித்துள்ளார். ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அமமுக இடம்பெற்று, தேனி மற்றும் திருச்சி தொகுதிகளில் போட்டியிட்டது. அந்த தேர்தலில் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களமிறங்கியது. இந்தச் சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்தது.
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என தீர்க்கமாக அறிவிக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த தினகரன், பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார். அப்போது அண்ணாமலை தங்களை சரியாக நடத்தியதாக பாராட்டிய தினகரன், நயினார் நகேந்திரன் மீது குற்றச்சாட்டுகளையும் அடுக்கியிருந்தார்.
இந்தச் சூழலில், சென்னை அடையாறில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனின் இல்லத்தில், அவரை அண்ணாமலை நேற்றிரவு சந்தித்தார். ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, தினகரனை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருமாறு அண்ணாமலை அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இந்த சந்திப்பின்போது தினகரனிடம் அண்ணாமலை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை இது விஷயமாக தினகரனை சந்தித்தாரா அல்லது வேறு ஏதேனும் அரசியல் நகர்வுகள் இதன் பின்னால் உள்ளதா என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.