திருநெல்வேலி: விஜய்யின் பின்புலத்தில் பாஜக, அமித்ஷா இருக்கும் தைரியத்தில்தான், அரசியல் அரிச்சுவடி தெரியாமலேயே அவர் அகந்தையோடு பேசி வருகிறார் என நெல்லையில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு பணிகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது சுற்றுப் பயணங்களின் போது சினிமாவில் பேசுவதை போல் பேசுகிறார் அகந்தையோடு அவர் பேசி வருகிறார்.
அமித்ஷா சொல்லித்தான் புஸ்ஸி ஆனந்த் மூலம் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். பின்புலத்தில் அமித்ஷா பாஜக இருக்கும் தைரியத்தில் தான் விஜய் அகந்தையோடு கூட்டங்களில் பேசுகிறார். முதல்வரை மிரட்டும் தொனியில் பேசுவதில் இருந்தே பாஜக தான் விஜய்யை இயக்குகிறது என்பது தெரிய வருகிறது. முதல்வரை, பிரதமரை விமர்சிக்கும் போது கண்ணியத்துடன், கவனத்துடன் பேச வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தை கண்டு ஆளும் கட்சி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பயப்படுபவர்களுக்கு தான் பயம் வர வேண்டும். தமிழ்நாட்டில் யாரும் யாருக்கும் பயப்படவில்லை. இவரைப் போல் ‘தலைவா’ படப் பிரச்சினைக்கு மூன்று நாட்கள் கோடநாட்டில் காத்திருந்து காலில் விழுந்தவர்கள் நாங்கள் அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் பேசி அப்பாவு, “ஜிஎஸ்டி வரி விலக்கு மக்களுக்கான தீபாவளிப் பரிசு என்று பிரதமர் அறிவித்துள்ளார் ஆண்டுக்கு 2.5 லட்சம் கோடி ரூபாய் சலுகை கிடைக்க உள்ளது. இதனால் மக்கள் சேமிப்பு உயரும் எனப் பிரதமர் சொல்கிறார். அப்படியென்றால் 8 ஆண்டு காலமாக அவர்கள் சேமித்த 20 லட்சம் கோடி ரூபாய் எங்கு சென்றது எனப் பிரதமரிடம் கேளுங்கள்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் நிதியை வழங்கவில்லை என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவிக்கிறார். பாஜக ஆட்சி செய்யும் மாநிலமான மகாராஷ்டிராவில் மும்மொழிக் கொள்கை ஏற்கப்படவில்லை ஆனால் அங்கு நிதி கொடுக்கப்பட்டுள்ளது மத்திய அரசு கொடுக்கும் நிதியை முறையாக கொடுக்க வேண்டும். மாற்றான் தாய் மனப்பான்மையோடு எந்த மாநிலத்தையும் நடத்தக்கூடாது.
நேரு கொண்டு வந்த இருமொழிக் கொள்கைதான் இன்று வரை தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது ஒருபோதும் இந்தியையும் ஏற்க மாட்டோம்; மும்மொழிக் கொள்கையையும் ஏற்க மாட்டோம். அரசுப் பள்ளிகள் குறித்து ஆளுநர் ஐயோ பாவம் எதுவும் தெரியாமல் எழுதிக் கொடுத்ததைப் பேசுகிறார்.
பாமகவில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து சட்டப்பேரவை கூடும்போது பார்த்துக் கொள்ளலாம்.