மதுரை: கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்
திருத்தொண்டர் சபையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: ”கரூர் மாவட்டத்தில் உள்ள வஞ்சுளீஸ்வரர் கோயில், அக்னீஸ்வரர் கோயில், கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் உள்பட 64 கோயில்களுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களில் பெரும்பாலாவை தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சில சொத்துக்கள் தனி நபர் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட கோயில்களுக்கு சொந்தமாக சுமார் 500 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலங்களை ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து மீட்டு கோயில்களின் வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கரூர் மாவட்ட கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து மீட்டு பராமரிக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில், கோயில் நிலங்கள் குறித்து வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து 2015-ல் அறிக்கை தயாரித்தது. அந்த அறிக்கை தற்போது மாயமாகியுள்ளது. தற்போது கோயில்களுக்கு சொந்தமான 500 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த சொத்துக்களின் மதிப்பு ரூ.35 ஆயிரம் கோடியை தாண்டும். எனவே கோயில் நிலங்களை மீட்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், கரூர் மாவட்டத்தில் எத்தனை கோயில்கள் உள்ளன ? அந்த கோயில்களின் சொத்து விவரங்கள் எவ்வளவு ? அதில் எவ்வளவு சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது ? எத்தனை கடைகள் உள்ளன? அதிலிருந்து எவ்வளவு வருமானம் வருகிறது? ஆக்கிரமிப்புகளை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர், அறநிலையத் துறை ஆணையர் இணைந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
குறைந்தபட்சம் 20 கோயில்களின் நிலை அறிக்கையை அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்ய வேண்டும். மேலும், 2015-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு மாயமான கோயில் சொத்துக்கள் தொடர்பான கோப்புகளையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.