துபாய்: இந்திய அணி உடனான நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் பாகிஸ்தானின் சாஹிப்சாதா ஃபர்ஹான் அரைசதம் விளாசினார். அதை அவர் கொண்டாடிய விதம் சர்ச்சை ஆகியுள்ளது.
துபாயில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. பஹர் ஸமான் உடன் சாஹிப்சாதா ஃபர்ஹான் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தார். ஸமான் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் விரைந்து ரன் குவித்த சாஹிப்சாதா ஃபர்ஹான் 35 பந்துகளில் அரைசதம் எட்டினார். பும்ராவுக்கு எதிராக அதிரடி காட்டினார். 10-வது ஓவரில் அக்சர் வீசிய பந்தை சிக்ஸருக்கு விளாசி அரைசதம் கடந்தார். அதை அவர் கொண்டாடியதுதான் சர்ச்சை ஆகியுள்ளது.
வழக்காக சதம் அல்லது அரைசதம் கடந்ததும் பேட்ஸ்மேன்கள் பேட்டை உயர்த்தி காட்டுவார்கள். சிலர் அதை இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக கொண்டாடுவார்கள். அது அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும். ஆனால், ஃபர்ஹான் நேற்றைய ஆட்டத்தில் அரைசதம் விளாசியதும் பேட்டை துப்பாக்கியை தூக்கி சுடுவது போல செய்தார். அதுதான் இப்போது சர்ச்சை ஆகியுள்ளது. இந்த ஆட்டத்தை அவர் 45 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் புகலிடங்களில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள இந்திய மாநிலங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதை இந்திய ராணுவம் இடைமறித்தது. பின்னர் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் உடனான ஆட்டத்தில் இந்தியா புறக்கணிக்க வேண்டுமென்ற குரல்கள் எழுந்தன. இருப்பினும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி நடந்தது. அதேநேரத்தில் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்கள் உடன் கைகுலுக்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில் ஃபர்ஹான் செயல் சர்ச்சையாகி உள்ளது.