நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் சட்டப்பேரவை தொகுதியானது பழங்குடியினருக்கானதாகும். இந்தத் தொகுதியை கடந்த 30 ஆண்டுகளாக திமுக-வும் அதிமுக-வுமே மாறி மாறி கைப்பற்றி வருகின்றன. ஆனால் என்னவொரு விநோதம் என்றால், கட்சிகள் தான் மாறுகின்றனவே போட்டியிட்டு ஜெயிக்கும் வேட்பாளர்கள் மாறவே இல்லை.
திமுக-வில் ஒன்றியச் செயலாளர், மாவட்டத் துணைச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த சி.சந்திரசேகரன் 1996-ல் திமுக சார்பில் சேந்தமங்கலத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதனால் அடுத்த தேர்தலிலும் இவருக்கே வாய்ப்பளித்தது திமுக. ஆனால், இரண்டாவது முறையாக அவரால் கரைசேரமுடியவில்லை.
இருப்பினும் 2006-லும் மூன்றாவது முறையாக திமுக-வில் சீட் கேட்டார் சந்திரசேகரன். ஆனால், அவரை ஒதுக்கிவிட்டு கு.பொன்னுசாமிக்கு சீட் கொடுத்தது தலைமை. அதனால் பொன்னுசாமியை எதிர்த்து சுயேச்சையாக களமிறங்கினார் சந்திரசேகரன். அப்போது வீரபாண்டியார் தலையிட்டு பஞ்சாயத்துப் பேசியதால் வேகத்தைக் குறைத்துக் கொண்டார் சந்திரசேகரன். அதனால் அப்போது பொன்னுசாமி வெற்றிபெற்றார்.
இதையடுத்து அதிமுக-வில் ஐக்கியமான சந்திரசேகரனுக்கு 2016-ல் சீட் கொடுத்தது அதிமுக தலைமை. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரசேகரன் 2021-லும் சேந்தமங்கலத்தை எதிர்பார்த்தார். ஆனால், எடப்பாடியார் கொடுக்கவில்லை. இதனால் தனது வழக்கப்படி ஆட்டோ சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியியிட்டு 11,371 ஓட்டுகள் பெற்றார். அதேசமயம், 10,493 ஓட்டுகள் வித்தியாசத்தில் தொகுதியை திமுக-விடம் பறிகொடுத்தது அதிமுக.
கடந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு அதிமுக-வின் வெற்றிக்கு வேட்டு வைத்த சந்திரசேகரன், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பிற்பாடு ஓபிஎஸ் பின்னால் அணிவகுத்துவிட்டு நான்காண்டுகள் கழித்து அண்மையில் மீண்டும் அதிமுக-வுக்கு திரும்பினார். இப்போது 2026 தேர்தலில் சேந்தமங்கலத்தில் மீண்டும் அதிமுக வேட்பாளராக களமிறங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் அதிவேகமாக ஈடுபட்டுள்ளார் சந்திரசேகரன். இதனால் புகைச்சல் அடைந்திருக்கும் ‘நிரந்தர’ அதிமுக-வினர், சந்திரசேகரனின் கடந்த கால வரலாற்றை எல்லாம் கிளற ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து 2006-ல் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தோற்ற கொல்லிமலை பி.சந்திரன் நம்மிடம் பேசுகையில், “திமுக, அதிமுக என மாறி மாறி பயணித்திருக்கும் சந்திரசேகரன், கட்சி தலைமை தேர்தலில் சீட் கொடுக்கவில்லை என்றால் சுயேச்சையாக போட்டியிட்டு கட்சி வேட்பாளரை தோற்கடிக்கும் முயற்சியில் இறங்குவதை இரண்டு கட்சிகளில் இருந்த போதும் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். கடந்த முறை இங்கே அதிமுக தோற்றதற்குக் காரணமே அவர் தான். மீண்டும் சீட்டை எதிர்பார்த்துத்தான் அவர் அதிமுக-வுக்கு வந்திருக்கிறார் என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால், நாங்கள் எல்லாம் கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள்.
ஒரு சில அதிருப்தி காரணமாக நான் தினகரன் பக்கம் போனேன். கடந்த தேர்தலில் அமமுக வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்ட நிலையிலும் அதிமுக தலைமை அழைத்ததால் அமமுக வேட்பாளராகவே அதிமுக-வில் இணைந்தேன். அதனால், இம்முறை நானும் அதிமுக-வில் சீட் கேட்பேன். இருப்பினும் தலைமை என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்பட்டு நடப்பேன்” என்றார்.
இதுகுறித்து சந்திரசேகரனிடம் கேட்டபோது, “1996-ல் நான் திமுக எம்எல்ஏ-வாக இருந்தபோது இந்தத் தொகுதிக்காக பல்வேறு பணிகளைச் செய்திருக்கிறேன். அதேபோல், 2016-ல் அதிமுக எம்எல் ஏ-வாக தேர்வான போதும் கொல்லிமலைக்கு மாற்றுப்பாதை, சேந்தமங்கலம் பைபாஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்துள்ளேன்.
பொதுநலன் சார்ந்தே செயல்படும் நான் தற்போதும் பொதுநிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். எனது சேவைகளைப் பார்த்துவிட்டு கொல்லிமலையில் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒரு மனதாக என்னை வேட்பாளராக அவர்களாகவே தேர்வு செய்துள்ளனர். இருந்தாலும் தலைமை என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்பட்டு நடப்பேன்” என்றார். சீட் கிடைக்காவிட்டால் சுயேச்சை ஆயுதமேந்தி கழகங்களை கதறவிட்டே பழகிவிட்ட சந்திரசேகரன் இம்முறை என்ன முடிவெடுக்கிறார் என்று பார்க்கலாம்!