புதுடெல்லி: 2006 முதல் 2014 வரை ஜிஎஸ்டியை எதிர்த்த ஒரே மாநில முதல்வர் நரேந்திர மோடிதான் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், ஜிஎஸ்டி முதன்முறையாக ஜூலை 2017ல் அமல்படுத்தப்பட்டது. அப்போது இந்த வரி முறையை ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் கப்பர் சிங் வரி (பாலிவுட் படமான ஷோலேவில் வரும் புகழ்பெற்ற கதாபாத்திரம்) என்று விமர்சித்தது. இந்த வரி முறை நல்லதோ அல்லது எளிமையானதோ அல்ல. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நமது பொருளாதாரத்துக்கு இது அதிர்ச்சியாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், அவர்கள் 8 ஆண்டுகளாக எங்களை நம்பவில்லை. எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை என விமர்சித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்திய பொருட்களுக்கு விதித்த 50% இறக்குமதி வரி காரணமாகவே, உள்நாட்டின் வரி கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் இந்திய அரசாங்கத்துக்கு ஏற்பட்டதாகவும் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். டொனால்டு ட்ரம்ப் விதித்த வரி காரணமாகவே, (உள்நாட்டில்) வரி கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்பட்டது. ஆனால், இப்போது இதை அவர்கள் ஒரு திருவிழா போல கொண்டாடுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டியை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் கட்சிதான் என்பதை நினைவுகூர்ந்த ஜெயராம் ரமேஷ், அப்போது ஜிஎஸ்டியை எதிர்த்தவர் குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடி என கூறியுள்ளார். ஜிஎஸ்டியை அமல்படுத்துவதற்கான திட்டம், முதன்முதலில் 2006-ம் ஆண்டு பட்ஜெட் உரையில் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தால் வழங்கப்பட்டது. பின்னர் 2010ல் ஒரு மசோதாவாக இது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா இரண்டரை ஆண்டுகள் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையின் கீழ் இருந்தது.
நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்த அந்த காலகட்டத்தில்தான் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 2006 முதல் 2014 வரை ஒரே ஒரு முதல்வர் மட்டுமே ஜிஎஸ்டியை எதிர்த்தார். அந்த முதல்வர்தான் 2014-ல் பிரதமரானார். பின்னர் யு டர்ன் எடுத்து, தேவ தூதராக மாறிவிட்டார் என விமர்சித்துள்ளார்.