ஆசியக் கோப்பை டி20 சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை மீண்டும் இந்திய அணி பந்தாடி வென்றது.
இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க அதிரடி வீரர் ஃபகர் ஜமான், ஹர்திக் பாண்டியா பந்தில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் ஆகி அவுட் ஆனதாகத் தீர்ப்பளிக்கப்பட்டார், இந்தத் தீர்ப்பின் மீதான அதிருப்தியை ஃபகர் ஜமான் அப்போதே வெளிப்படுத்த கேப்டன் சல்மான் ஆகா, ஆட்டம் முடிந்த பிறகு அது அவுட் இல்லை என்று கூறியுள்ளார்.
ஃபகர் ஜமான் அபாயகரமான பேட்டர், அவர் நேற்று தான் எதிர்கொண்ட முதல் 8 பந்துகளில் 3 பவுண்டரிகளை விளாசி 9 பந்துகளில் 15 ரன்கள் என்று விரைந்தார். ஆனால் ஹர்திக் பாண்டியா ஒரு பந்தை லேசாக வெளியே எடுக்க அது ஃபகர் ஜமானின் மட்டை வெளி விளிம்பில் பட்டு சஞ்சு சாம்சனிடம் செல்ல தாழ்வாக வந்த கேட்சை சஞ்சு எடுத்தார்.
பந்தில் வேகம் இல்லை, அது ஸ்லோ பந்தாக அமைந்ததால் சஞ்சு சாம்சன் முன்னால் பாய்ந்து பிடிக்க வேண்டியதாயிற்று, கிளவ் பந்துக்கு அடியில்தான் இருந்தது என்று இந்தியர்கள் அவுட் முறையிட்டனர். டிவி நடுவர் ருச்சிரா பல்லியகுருகே ரீப்ளேக்களை திரும்பத் திரும்ப பார்த்து அவுட் என்றார். அதாவது பந்து கிளவ்வுக்குள் தான் பவுன்ஸ் ஆயிற்றே தவிர தரையில் அல்ல என்பது அவரது துணிபு. இல்லை தரையில் பவுன்ஸ் ஆகித்தான் கேட்ச் ஆனது என்பது ஃபகர் ஜமானின் நம்பிக்கை. இதனால் அதிருப்தியுடன் மட்டையை தன் கால்காப்பில் அடித்துக் காட்டி வெளியேறினார்.
இந்நிலையில், ஆட்டம் முடிந்தவுடன் சல்மான் ஆகா அளித்த பேட்டியில் கூறும்போது, “நடுவர்கள் தவறு செய்வார்கள். கீப்பருக்கு முன் பந்து தரையில் பட்டது என்றே நான் கருதுகிறேன். என் கருத்துக் கூட தவறாக இருக்கலாம். ஃபகர் ஜமான் நன்றாக ஆடிக்கொண்டிருந்தார். அவர் மட்டும் பவர் ப்ளேயைத் தாண்டியிருந்தால் நாங்கள் 190 ரன்களைக் குவித்திருப்போம்.
ஆனால், நடுவர்கள் தீர்ப்புகளைச் சரியாக வழங்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை அந்த கேட்ச் தரையில் பட்டு எடுக்கப்பட்டதே. நான் கூட தவறாக இருக்கலாம் அதே போல் நடுவரும் தவறாக இருக்கலாமே.
மொத்தமாக பேட்டிங் முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் 10 ஓவர்களுக்குப் பிறகு பந்து மென்மையாகி விடும்போது ஸ்கோர் செய்வது கடினம். இன்னும் 15 ரன்கள் கூட எடுத்திருக்கலாம். மேலும் பவர் ப்ளேயில் சரியாக நாங்கள் வீசவில்லை. அடித்து நொறுக்கிவிட்டனர். ஆனால் கொடுத்த தொடக்கத்திற்கு ஸ்கோர் குறைந்தது 180 ரன்களையாவது எட்டியிருக்க வேண்டும். இந்தப் போட்டியை மறக்க வேண்டியதுதான். அப்போதுதான் அடுத்த போட்டிக்கு எங்களை நாங்கள் திரட்டிக் கொள்ள முடியும்.” என்று கூறினார்.