புதுடெல்லி: எச்1பி விசா கட்டண உயர்வு விவகாரத்தால் இந்திய இளைஞர்கள் திருமணத்தை ரத்து செய்து விட்டு அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. ரூ.1.32 லட்சமாக இருந்த இந்த விசா கட்டணத்தை அமெரிக்க அரசு திடீரென ரூ.88 லட்சமாக உயர்த்தியது. புதிய கட்டண முறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் எச்1பி விசாவில் சுமார் 7.50 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் மனைவி, பிள்ளைகள் என சுமார் 6 லட்சம் பேரும் அமெரிக்காவில் வசிக்கின்றனர். இதில் 75 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர்.
எச்1 பி விசா கட்டண விதிகள் குறித்து முதல் நாளில் தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை. இதன்காரணமாக அமெரிக்காவின் மெட்டா, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள், வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவுக்கு திரும்ப அறிவுறுத்தியது.
அமெரிக்காவில் எச்1பி விசாவில் பணியாற்றும் இந்திய மென்பொறியாளர்கள் பலரும் நவராத்திரியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர். இதேபோல திருமணத்துக்காகவும் பலர் இந்தியாவுக்கு வந்துள்ளனர். எச்1பி விசா கட்டண உயர்வு விவகாரத்தால் இந்திய மென்பொறியாளர்கள் உடனடியாக அமெரிக்காவுக்கு புறப்பட்டு உள்ளனர்.
பெயர் வெளியிட விரும்பாத இந்திய மென்பொறியாளர் ஒருவர் கூறும்போது, “நான் பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்ப இ-மெயில் அனுப்பப்பட்டு உள்ளது. இதன்காரணமாக திருமணத்தை ரத்து செய்துவிட்டு அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்கிறேன்’’ என்று தெரிவித்தார். இதேபோல ஏராளமான இந்திய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் திருமணத்தை ரத்து செய்துவிட்டு அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய பொறியாளர் ஒருவர் கூறும்போது, “தீபாவளிக்காக இந்தியா திரும்ப திட்டமிட்டு இருந்தேன். இப்போதைய நிலையில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம் என்று நிறுவன அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் தீபாவளி பயணத்தை ரத்து செய்துள்ளேன்’’ என்று தெரிவித்தார்.
அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய மென்பொறியாளர் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்க அரசின் நடவடிக்கை அநீதியானது. ஒரு வாரம்கூட எனது தாயோடு தங்க முடியவில்லை. அமெரிக்க அரசை பொறுத்தவரை எச்1பி என்பது வெறும் விசா மட்டுமே. அந்த விசாவின் பின்னால் மனிதர்கள் உள்ளனர். அவர்களின் வாழ்க்கை அடங்கியிருக்கிறது. அனைத்தையும் இழந்து அமெரிக்காவுக்கு புறப்படுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.