சென்னை: பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் வருகை அதிகரித்துள்ளதால், தென்சென்னை வருவாய் கோட்டத்தில் உள்ள கிண்டியில் புததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள புலத்தில் 2,130 சதுரமீட்டர் நிலத்தில் புதிய பல அடுக்கு நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட உள்ளதால், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களின் வருகை அதிகரித்து கூட்ட நெரிசல் மற்றும் மக்கள் வந்து செல்ல போதிய இட வசதியின்மை ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, அதிக மக்கள் தொகை மற்றும் அதிக வருவாய் வட்டங்களை உள்ளடக்கிய சென்னை மாவட்ட வருவாய் நிர்வாகம், போதிய இடவசதியின்றி செயல்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பிற மாவட்டங்களில் இருப்பதை போன்று, மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலகம் முகாம் அலுவலகம் கூடிய சென்னை மாவட்ட வருவாய் நிர்வாகத்துக்கு உட்பட்ட அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் செயல்பட ஏதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பது இன்றியமையாததாகும்.
1.43 ஹெக்டேர் நிலம்: எனவே, சென்னை மாவட்டம், தென் சென்னை வருவாய் கோட்டம், கிண்டி வட்டம் வெங்கடபுரம் கிராமத்தில் 1.43 ஹெக்டேர் அரசு புறம்போக்கு நிலத்தை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக சொந்த கட்டிடம் கட்ட நிலமாற்றம் செய்யக் கோரி பரிந்துரைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் நில நிர்வாக ஆணையர் ஆகியோரின் பரிந்துரைகளின் அடிப்படையில், தென் சென்னை வருவாய் கோட்டம் கிண்டி வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக சொந்த கட்டிடம் கட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிலமாற்றம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.