துபாய்: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இரு அணி கேப்டன்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் நேற்றைய போட்டியின்போது பாகிஸ்தான் கேப்டன் சல்மானுடன் கைகுலுக்க இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீண்டும் மறுத்துவிட்டார்.
கடந்த ஏப்ரலில் பஹல்காமில் நடந்த கொடூர தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு இந்தியாவின் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு பதிலடி தரப்பட்டது. அந்த சம்பவத்துக்குப் பின்னர் தற்போதுதான் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.
பாகிஸ்தானுடன் ஐசிசி மற்றும் பல அணி பங்குபெறும் தொடர்களில் மட்டும் ஆடுவதென்பதும், இருதரப்பு தொடர்களை தவிர்ப்பதும் இந்திய அரசின் கொள்கையாகவே வகுத்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய அணியினர் கைகுலுக்கவில்லை.
இந்நிலையில், துபாய் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றுப் போட்டியின்போதும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவுடன், கேப்டன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்கவில்லை. டாஸில் வெற்றி பெற்ற, கேப்டன் சூர்யகுமார் யாதவ் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதற்கான காரணத்தை வர்ணனையாளரிடம் தெரிவித்த பின்னர், நேரடியாக சென்று சக அணி வீரர்களுடன் இணைந்துகொண்டார். இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது.