துபாய்: வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டதால் தோல்வி கண்டோம் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி டி20 வடிவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற சூப்பர்-4 சுற்று முதல் ஆட்டத்தில் வங்கதேசம், இலங்கை அணிகள் மோதின.
முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. இலங்கை அணி சார்பில் பதும் நிஸங்கா 22, குசல் மெண்டிஸ் 34, கமில் மிஷாரா 5, குசல் பெரேரா 16, சரித் அசலஙI்கா 21, கமிந்து மெண்டிஸ் 1, வனிந்து ஹசரங்கா 2 ரன்கள் எடுத்தனர். தசன் ஷனகா சிறப்பாக விளையாடி 37 பந்துகளில் 64 ரன்கள் (3 பவுண்டரி, 6 சிக்ஸர்) குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
வங்கதேச அணி தரப்பில் முஸ்டாபிசுர் 3, மஹேதி ஹசன் 2, டஸ்கின் அகமது ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 169 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய வங்கதேச அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. அந்த அணியின் சைஃப் ஹசன் 61, கேப்டன் லிட்டன் தாஸ் 23, டவ்ஹித் ஹிர்டோய் 58, ஷமிம் ஹொசைன் 14, ஜாகேர் அலி 9 ரன்கள் எடுத்தனர்.
இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டது குறித்து இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா கூறியதாவது: இந்த ஆட்டம் கடைசி வரை மிகவும் பரபரப்பாக இருந்தது. ஆட்டத்தை நாங்கள் கடைசி ஓவர் வரை கொண்டு சென்றோம். பேட்டிங்கின்போது நாங்கள் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம். இதனாலேயே தோல்வி கண்டோம். கடைசி 2 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டிருந்தால் வெற்றி எங்கள் பக்கம் வந்திருக்கலாம். தசன் ஷனகா அபாரமாக விளையாடினார். வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு மீண்டு வருவோம். இவ்வாறு அவர்
தெரிவித்தார்.