புதுடெல்லி: நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று அமலுக்கு வருகிறது. இதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் அபரிமிதமாக வளர்ச்சி அடையும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி 2.0 வரி விகிதம் இன்று அமலுக்கு வருகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி நேற்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அவர் பேசிய தாவது: நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள். நவராத்திரி பண்டிகை தொடங்கும் இந்த நன்னாளில் (இன்று) சுயசார்பு இந்தியா இயக்கத்தின் மிக முக்கிய மாற்றம் தொடங்க உள்ளது. அதாவது, ஜிஎஸ்டி 2.0 வரிவிகிதம் அமலுக்கு வருகிறது. இதன்மூலம் கோடிக்கணக்கான குடும்பங்களில் சேமிப்பு திருவிழா தொடங்குகிறது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்த பண்டிகை காலத்தில் உங்கள் சேமிப்பு கணிசமாக அதிகரிக்கும். நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்க முடியும். ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சி பொங்கும்.
புதிய வரி விகிதத்தால் ஏழை, நடுத்தர மக்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் பயனடைவார்கள். நாட்டின் பொருளாதாரம் அபரிமிதமாக வளர்ச்சி அடையும். ஒரு காலத்தில் சேவை வரி, வாட், கலால் வரி, விற்பனை வரி, நுழைவு வரி என பலவிதமான வரிகள் விதிக்கப்பட்டன. ஒரு பொருளை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல 12-க்கும் மேற்பட்ட வரிகள்விதிக்கப்பட்டன.
கடந்த 2014-ல் நான் பிரதமராக பதவியேற்ற பிறகு, பலமுனை வரிக்கு தீர்வு காண முன்னுரிமை அளித்தேன். ஜிஎஸ்டி வரி விகிதம் குறித்து அனைத்து மாநில அரசுகளுடனும் மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சுமுக தீர்வு எட்டப்பட்டது. இதன்பிறகு ‘ஒரு நாடு, ஒரே வரி’ என்ற கனவு திட்டம் நனவானது. கடந்த 2017-ல் ஜிஎஸ்டி வரி விகிதம் அமல்படுத்தப்பட்டது. இந்திய பொருளாதாரத்தில் புதிய அத்தி யாயம் தொடங்கியது. சீர்திருத்தம் என்பது ஒரே இடத்தில் நின்றுவிட கூடாது. காலம், சூழ்நிலைக்கு ஏற்ப சீர்திருத்தம் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும்.
நாட்டின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, ஜிஎஸ்டி 2.0 வரி விகிதம் வரையறுக்கப்பட்டுள்ளது. இனிமேல் 5%, 18% என்ற இரு வரி அடுக்குகள் மட்டுமே அமலில்இருக்கும். இதற்கு முன்பு 12 சதவீத வரி அடுக்கில் இருந்த 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி வரம்பின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. பல்வேறு பொருட்களுக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள் விலை கணிசமாக குறையும். வீடு கட்டுவது, புதிய டிவி, ஃபிரிட்ஜ், பைக், ஸ்கூட்டர் வாங்குவது எளிதாகும். போக்குவரத்து செலவு, ஓட்டல்களில் தங்குவதற்கான வாடகை குறையும். அனைவருக்கும் நவராத்திரி, ஜிஎஸ்டி சேமிப்பு திருவிழா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.
‘சுதேசி இயக்கத்தை மீண்டும் முன்னெடுப்போம்’ – பிரதமர் தனது உரையில் கூறிய தாவது: ஜிஎஸ்டி வரி விகித சீர்திருத்தத்தால் நாடு முழுவதும் முதலீடுகள் அதிகரிக்கும், வர்த்தகம் பெருகும். ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்லும்.
இந்த மாற்றத்தால் பொதுமக்கள் மட்டுமன்றி, வணிகர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனிமேல் அவர்களது வியாபாரம் பெருகும். தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு, ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக இந்தியர்களால் சுமார் ரூ.2.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக சேமிக்க முடியும்.
ஜிஎஸ்டி வரி குறைப்பால் குறு, சிறு தொழில்கள் மிகுந்த பலன் அடையும். அந்த நிறுவனங்களின் விற்பனை அதிகரிக்கும். நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும் பாக இருக்கும் குறு, சிறு தொழில்நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி குறைப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் தயாரிக்கும் ஒவ்வொரு பொருளும் உலகத் தரத்தில் இருக்க வேண்டும். இதன்மூலம் சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயரும்.
வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த லட்சியத்தை அடைய அனைத்து துறைகளிலும் நாம் சுயசார்பை எட்ட வேண்டும். மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். சுதந்திரப் போராட்ட காலத்தில் சுதேசி இயக்கம் மிக முக்கிய பங்குவகித்தது. அந்த இயக்கத்தை தற்போது மீண்டும் முன்னெடுக்க வேண்டும்.
நாம் அன்றாடம் பயன்படுத்துவதில் பல பொருட்கள் வெளிநாட்டில் தயாரானவை. இனிமேல், வெளிநாட்டு பொருட்கள் வாங்குவதை நாம் தவிர்க்க வேண்டும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். ஒவ்வொரு கடையிலும் உள்நாட்டு பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். ‘இங்கு சுதேசி பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது’ என்று அனைத்து கடைகளிலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
மாநில அரசுகளும் இதில் இணைந்து பணியாற்றி, சுதேசி இந்தியா இயக்கத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சி அடைய வேண்டும். அப்போதுதான் இந்தியா வளர்ச்சி அடையும்.இவ்வாறு பிரதமர் பேசினார்.