‘லோகா’ படம் தொடர்ந்து நல்ல வசூல் செய்து வருவதால், இதன் ஓடிடி வெளியீடு தாமதமாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
டாமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லென் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘லோகா: சாப்டர் 1’. இப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி வசூலில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று நன்றி தெரிவித்தனர். தற்போது வரை இப்படத்துக்கு பின் வெளியான படங்களை விட நல்ல வசூல் செய்து வருகிறது.
இந்த தொடர் வரவேற்பினால், படத்தின் ஓடிடி வெளியீடு இப்போதைக்கு இல்லை என்று தயாரிப்பாளர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். ஓடிடி வெளியீடு தொடர்பாக, “இப்போதைக்கு ’லோகா’ ஓடிடி தளத்தில் வெளியீடு இல்லை. அது தொடர்பாக வெளியாகும் வதந்திகளை புறக்கணித்து விடுங்கள். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புக்கு காத்திருங்கள்”” என்று துல்கர் சல்மான் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ’லோகா: சாப்டர் 1’. ‘எம்புரான்’, ‘துடரும்’ உள்ளிட்ட படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்து முதலிடத்தினை பிடித்திருக்கிறது. இப்படத்தில் டோவினோ தாமஸ், துல்கர் சல்மான் உள்ளிட்டோர் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.