கோவை: ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்றம் அமலுக்கு வந்த நிலையில், ‘வெட் கிரைண்டர்’, ‘ஜாப் ஒர்க்’ பணிகளுக்கு விதிக்கப்பட்ட வரியும் 5 சதவீதமாக விரைவில் குறைய வாய்ப்பு உள்ளதாகவும், மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் விசாரித்துள்ளது நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாற்றியமைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு நாடு முழுவதும் நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் விலை குறையும் என்பதால் மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உற்பத்தி பிரிவை சேர்ந்த தொழில்துறையினர் பல நாட்களாக முன்வைத்து வரும் கோரிக்கையான ‘வெட் கிரைண்டர்கள்’, ‘ஜாப் ஒர்க்’ பிரிவிற்கு ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைப்படாதது தொழில்துறையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சருக்கு பல்வேறு தொழில் அமைப்பினர் கோரிக்கை மனு அனுப்பிய நிலையில், நிதித்துறை அலுவலக அதிகாரிகள் அழைத்து விசாரித்ததாகவும் இதனால் வரி விரைவில் குறையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியா) தலைவர் கார்த்திகேயன் கூறும்போது, உற்பத்தி பிரிவின்கீழ் பணி ஆணைகளை பெற்று ‘ஜாப் ஒர்க்’ அடிப்படையில் செயல்படும் ‘எம்எஸ்எம்இ’ நிறுவனங்களுக்கு வரியை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் வரி உயர்த்தப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியது.
இரண்டு வரி பிரிவுகள் மட்டும் உள்ளதால் இந்நடவடிக்கை மேற்கொண்டதாகவும் 18 சதவீத வரி விதிப்பில் மட்டுமே செலுத்தும் வரியை திரும்ப பெறும் (இன்புட் டாக்ஸ் கெரெடிட்) வசதி வழங்கப்படும் என காரணம் தெரிவிக்கப்பட்டது.
எங்கள் தொழில் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்பினர் 5 சதவீமாக வரியை குறைத்து, செலுத்தும் வரியை திரும்ப பெற உதவும் வகையில் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என மத்திய நிதி அமைச்சருக்கு கோரிக்கை மனுக்கள் அனுபப்பட்டன. நிதி அமைச்சக அதிகாரிகள் எங்களை தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து கேட்டறிந்தனர். எனவே விரைவில் ‘ஜாப் ஒர்க்’ பிரிவிற்கும் வரி 5 சதவீமாக குறைத்து அறிவிப்பு வெளியிடப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.” என்றார்.
கோவை வெட்கிரைண்டர்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (கவுமா) முன்னாள் தலைவர் சாஸ்தா ராஜா கூறும்போது, “வெட்கிரைண்டர்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு முன் ‘வாட்’ வரி அமலில் இருந்த போது 5 சதவீத வரி விதிக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்திய பின் 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. பின் 12 சதவீதமாக குறைக்கப்பட்டது.
கோரிக்கை தொடர்ந்ததால் 5 சதவீத வரி பிரிவிற்கு மாற்றப்பட்டது மீண்டும் 18 சதவீத வரி விதிப்பு வைக்கப்பட்டுள்ளது. இட்லி, தோசை போன்ற உணவு பொருட்கள் முன் தென்னிந்தியாவில் மட்டும் அதிக மக்கள் உட்கொண்டு வந்த நிலையில் தற்போது பல்வேறு வடமாநிலங்களிலும் இத்தகைய உணவு வகைகளை மக்கள் அதிகம் உட்கொண்டு வருகின்றனர்.
எனவே எங்களின் நியாயமான கோரிக்கை குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். விரைவில் 5 சதவீதமாக வரி குறைக்கப்படும் என நம்புகிறோம்.” என்றார்.