கோவை: சட்டப்பேரவை தேர்தலில் கோவையில் 10 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். என, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை செட்டி வீதியில் இன்று நடந்த ‘நலம்’ மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு வார காலம் நாடு முழுவதும் மக்களுக்கு பல்வேறு சேவை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கோவை தெற்கு தொகுதியில் 43-வது மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இந்நிகழ்வை அருகில் உள்ள அரசுப் பள்ளி, சமுதாய கூடங்களில் நடத்த அனுமதி கோரியும் அனுமதி வழங்கப்டுவதில்லை. மரக்கன்று நடுதல் உள்ளிட்ட நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக ஆளுங்கட்சியினர் தொடர்ந்து பல்வேறு வகையில் நெருக்கடிகளை தருகின்றனர்.
ஆனால் மக்களை ஏமாற்ற முடியாது. சட்டப்பேரவை தேர்தலில் கோவையில் 10 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். குடிநீர் 12 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. காரணம் கேட்டால் சிறுவாணி அணையில் நீர் இல்லை என கூறப்படுகிறது.
அணையை தூர்வார, நீர்மட்டத்தை அதிகரிக்க திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அரசு ஆளும் கேரளாவில் பேச்சுவார்த்தை நடத்துவதில் என்ன தயக்கம். நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு குறித்து திமுக அரசு யோசிப்பதே இல்லை.
எடப்பாடி பழனிசாமியுடன், நயினார் நாகேந்திரன் சந்திப்பு 2026-ல் திமுக-வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற ஒன்று மட்டும் தான் ஒற்றைக் குறிக்கோள். திமுக-விற்கு எதிராக உள்ளவர்கள் அனைவரும் ஒரே அணியில் சேர வேண்டும் என்பது தேசிய ஜனநாயக கூட்டணியின் எண்ணம்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் புதிதாக அரசியலுக்கு வந்து உள்ளதார். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். மக்களுக்கு சேவையாற்றும் உயர்ந்த எண்ணம் கொண்ட அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். விஜய் பேசும் விஷயத்தைப் பற்றி முழுமையாக படித்து தெரிந்து விட்டு பேச வேண்டும். வெட்கிரைண்டர்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பது தொடர்பாக தொழில் அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அண்ணாமலை உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். சென்னை கூட்டத்தில் அவரை சந்தித்து பேசினேன். கோவையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் உள்பட அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
வாக்காளர் பட்டியல் பெயர் நீக்கம் தொடர்பாக முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் வரும் நிலையில் அவர்களிடம் ஆதாரங்கள் இருந்தால் அவற்றை கொண்டு தேர்தல் ஆணையத்தில் முறையிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.