தமிழக வாக்காளர்களில் 6-ல் ஒருவர் இளைஞர் என்கிறது ஒரு புள்ளி விவரம். இவர்களை, குறிப்பாக ஜென் ஸீ இளைஞர்களை தவெக தன் பக்கம் வளைக்க விஜய் முயற்சிக்கிறார் என்று நிலவும் கருத்துகளையொட்டிய பார்வை இது.
கடந்த 13-ம் தேதி திருச்சி, அரியலூர், நேற்று (செப்.20) நாகப்பட்டினம், திருச்சி. இரண்டு வாரங்களில் 4 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்திருக்கிறார் தவெக தலைவர் விஜய். விஜய் அரசியலுக்கு வந்ததுமே அவர் கொள்கையைச் சொல்லட்டும் என்ற குரல் எழுந்தது. அதற்கு தமது தரப்பு பதிலாக ‘திமுக தான் எங்கள் அரசியல் எதிரி, பாஜக தான் எங்கள் கொள்கை எதிரி’ என இரண்டு மாநாட்டு மேடைகளில் சிம்பிளாக முழங்கினார் விஜய்.
பின்னர். களத்துக்கு வந்து மக்களை சந்திக்கட்டும் என்ற விமர்சனங்கள் எழுந்தது. இதோ இப்போது 4 மாவட்ட மக்கள் மத்தியில் உரையாற்றிய நிலையில், ‘எழுதிக் கொடுத்ததை படிப்பது, அதுவும் ஒரு நடிகருக்கு அதைச் செய்வது என்ன அத்தனை சிரமமா?, செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும் பார்ப்போம்’ என்ற விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளது.
ஆனால், வடிவேலு – சுந்தர்.சி காமெடி போல் இதோ உங்கள் ஏரியாவுக்கே, வீட்டுக்கே வந்துட்டேன் தொனியில் எல்லாவற்றிலும் விஜய் ஸ்கோர் செய்து வருகிறார் என்கின்றனர் தவெக நண்பாக்கள்.
விஜய்க்கு பெரும் கூட்டம் கூடுவது, அவர் திரைப் பிரபலம், 30 ஆண்டு காலமாக ஹீரோவாக ஜொலிப்பவர், இன்னும் அவருடைய படம் ஒன்று வெளியீட்டுக்காக இருக்கும் ஹீரோ என்பதெல்லாம் பெரும் பங்கு என்றாலும், வழக்கமான அரசியல் பாணியைத் தாண்டிய அவருடைய அப்ரோச் பலவும் இளம் வாக்காளர்களை நோக்கி இருப்பதை கவனிக்கலாம்.
அரசியலில் மேடைப் பேச்சுக்கு, பொதுக் கூட்டப் பேச்சுக்கு, பாராட்டு விழா பேச்சுக்கு, தெருமுனை பிரச்சாரத்துக்கு என்று பல பாணிகள் உண்டு. அடக்கி நாகரிகமாக பேசும் பேச்சு தொடங்கி தீப்பொறி தெறிக்கவிடும் பேச்சுக்கள் வரை வகை வகையாக அதைப் பேச ரகம் ரகமாக பேச்சாளர்களை கட்சி வளர்த்தெடுத்திருக்கும்.
இந்த வழக்கமான பாணியை முதலில் உடைத்து, தெளிவான உச்சரிப்பில் தமிழ் இருந்தாலும், திருக்குறள், சங்கத்துப் பாடல் என எதையாவது கோட் செய்தாலும் கூட அது இளைஞர்களை ஈர்க்கும் வகையில் ஏற்ற, இறக்கங்களோடு சினிமா டயலாக் டெலிவரி போல் ‘வாய்ப்பில்ல ராஜா’, போன்ற என்ற பஞ்ச்களுடன் இளசுகளுக்கான ட்ரெண்ட் செட் செய்தவர்தான் சீமான்.
நம் மொழி, நம் உடல் மொழி, நாம் பேசும் பஞ்ச் வார்த்தைகளை மேடையில் ஒருவர் பேசுகிறார். அரசியலை நாம் ரசிக்கும்படி பேசுகிறார் என்று சீமான் பின்னால் தம்பிகள் சென்றனர். சீமானின் பேச்சுக்கள் சில நேரங்களில் தடித்த வார்த்தைகள் கொண்டதாகவும், அவதூறான கருத்துகள் கொண்டதாகவும் கூட இருந்திருக்கிறது. ஆனாலும், நாதக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறுவது வரை அதைக் கொண்டு சென்றவர்கள் சீமான் பேச்சால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள்தான்.
2024 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி மொத்தமாக 8.19% வாக்குகளை பெற்றது. அதேபோல் மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து மொத்தமாக நாதக 35.60 லட்சம் வாக்குகளை பெற்றது. இதையெல்லாம் சாத்தியப்படுத்தியதில் இளம் தலைமுறையினர் பங்கு மிக முக்கியம்.
இப்போது விஜய்யின் அரசியல் பேச்சு, சீமானின் அப்டேடட் வெர்ஷன் போல் இருப்பதை உணர முடிகிறது என்று சில அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர். எழுதிக் கொடுத்த பேச்சுதான் என்பது அப்பட்டமாகத் தெரிந்தாலும் கூட, அதை உத்வேகத்தோடு, அதேவேளையில் ஜென் ஸீ இளைஞர்களின் இன்ஸ்டா, வாட்ஸ் அப் மொழியில், அவர்களை ஈர்க்கும் வகையில் பேசிக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை பொதுவாகவே ஜென்ஸீ இளைஞர்களின் சாட்கள் தங்க்லீஷில் தான் அதிகமாக இருக்கும். விஜய்யும் தனது அரசியல் உரைகளில் தங்க்லீஷ் வந்துபோவதை உறுதி செய்கிறார்.
வேரூன்றிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை நோக்கி கட்சிக் கொடி வண்ணத் துண்டுகளை விசிறி அடிக்க முடியாது. ஆனால், அப்படிச் செய்தால் அந்தக் கொடியை வாஞ்சையோடு தோளில் சால்வையாக போட்டுக் கொள்கிறார். சில நேரங்களில் அதை தலையில் கட்டிக் கொள்கிறார். விஜய் படத்தை ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ வரும் ரசிகர்கள் தலையில் கலர் கலராக கர்சீஃப் கட்டிக் கொள்வதுபோல், நெற்றிப் பட்டையாக கட்சிக் கொடியைக் கட்டி நானும் உங்களைப் போலத்தான் ப்ரோ என்று பதிவு செய்கிறார்.
அரசியல் மேடைக்கான சவால்களைக் கூட இளைஞர்களின் ஏரியா பிரச்சினை சவால் போல், “என்ன மிரட்டிப் பார்க்கிறீர்களா? தில் இருந்தா, கெத்தா வந்து மோதுங்கள்” என்று பேசுகிறார். “நான் தனி ஆள் இல்லை சார். தவெக மாபெரும் இளைஞர் இயக்கம்” என்ற விஜய்யின் பேச்சுத் துளிகள் ரீல்களாக கட் செய்யப்படுகின்றன.
அண்மைக்காலமாக பல நாடுகளில் மூளும் பெரும் அரசியல் போராட்டங்களின் பின்னணியில் ஜென் ஸீ இளைஞர்கள்தான் இருந்துள்ளனர். இலங்கை, மேற்கு வங்கம், இந்தோனேசியா, நேபாளத்தில் நடந்த போராட்டங்களின்போது ஜென் ஸீ தலைமுறையினரின் செய்கைகளே இதற்குச் சான்று. அதனால்தான் தேசிய அரசியலிலும் கூட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் வாக்குத் திருட்டு 2.0-ஐ எக்ஸ்போஸ் செய்தபின்னர், இந்த நாட்டின் ஜனநாயகத்தை ஜென் ஸீ இளைஞர்கள் பாதுகாப்பார்கள் என்று கூறினார்.
ஜென் ஸீ இளைஞர்கள் மீதான அரசியல்வாதிகளின் நம்பிக்கை ஒரு புதிய வீச்சைப் பெற்றுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய்யும் அவர்களையே தனது அரசியல் பயணத்துக்கு முதல் இலக்காக வைத்திருப்பது, அவரது ரசிகர்களைத் தாண்டி, தவெகவின் வாக்கு வங்கிக்கு பலம் சேர்க்கக் கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
கவன ஈர்ப்பு மட்டுமே போதுமா? – விஜய் அரசியலில் கவன ஈர்ப்பு என்பது ரசிகர்களைக் கடந்து, இளைஞர்கள், பெண்கள், சிறுபான்மையினர் என்று பரவிக் கொண்டிருப்பதாக தவெகவினர் நம்புகின்றனர். ஆனால், விஜய்க்கு கூட்டம் கூடுவது, அவர் மீதான அரசியல் எதிர்பார்ப்புக்காக அல்லாமல், உச்ச நட்சத்திரத்தை பார்க்கும் ஆர்வம் மட்டுமே என்கின்றனர் எதிர் தரப்பினர்.
விஜய்யின் ரசிகர்கள் இன்னும் முழுமையாக அரசியல் மயமாக்கப்படவில்லை. அவர்கள் ஈர்ப்பு அரசியலையும் தாண்டி அரசியல் மயமாக்கப்பட்ட படையாக மாற வேண்டும் என்பது விஜய் ரசிகர்கள் தாண்டிய ஜென் ஸீ இளைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதாவது, இணையத்தில் எதிர் தரப்பினரால் நிறுவப்படும் ‘தற்குறி’ எனும் இமேஜை உடைப்பதே தவெகவுக்கு பெரும் சவால்.
விஜய் அரசியலில் ஈர்க்கப்பட்ட ஓர் இளைஞர் கூறுகையில், “விஜய்க்கு இப்போது ஒரு கூட்டம் கூடுகிறது. எங்களைப் போன்ற இளைஞர்களையும் தாண்டி எங்கள் மாமா, சித்தப்பா, அப்பா, அம்மா என்று விஜய் பேச்சை கவனிக்கின்றனர். இப்போது ஊர் ஊராகச் செல்லும் விஜய் ஏன் அந்தந்த மாவட்டச் செயலாளர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கக் கூடாது?
அப்படிச் செய்தால் அந்தந்த ஊர் மக்களுக்கும் அவரது கட்சி மா.செ.க்களுக்கும் இடையே ஒரு பாண்டிங் ஏற்படும். மேலும், மாவட்ட குறைதீர் கூட்டங்களில் அந்த மா.செ.க்கள் மக்களுக்காக சென்று குரல் கொடுத்தால் இன்னும் கட்சி மீது கூடுதல் நம்பிக்கை வருமல்லவா?” என்று வினவுகிறார்.
‘திமுக, அதிமுக என இரு பெரும் திராவிடக் கட்சிகளும் எளிய மக்களுக்காக அறிவித்த சலுகைகள், விலையில்லா திட்டங்கள் ஏராளம். இப்போது ஆளும் திமுக மாணவர்களுக்காகவும், பெண்களுக்காகவும் பல்வேறு திட்டங்களையும் செய்யும் நிலையிலும், தவெகவுக்கு கூட்டம் கூடுகிறது என்பது நிச்சயமாகக் கவனிக்கப்பட வேண்டியதுதான். குறிப்பாக, அரசியல் களம் பக்கம் அரிதாகக் காணக் கூடிய பதின்ம வயது பட்டாளங்களையும் இழுத்து வருகிறார் விஜய்.
சோஷியல் மீடியாவில் அரசியல் பேசும் இளைஞர்கள் யாரும் களத்துக்கு வரமாட்டார்கள் என்ற கருத்தாக்கத்தை உடைத்துள்ள விஜய், அவர்களை வாக்குச் சாவடிகளை நோக்கி படையெடுக்க வைக்கவும் செய்வார் என்ற நம்பிக்கையும் வலுத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கவனிக்கின்றனர்.
ஜென் ஸீ தலைமுறையினரை இவ்வாறு ஈர்க்கும் விஜய்யின் வியூகம் 2026 தேர்தல் களத்தில் கைகொடுக்குமா என்பதை நிர்ணயிக்கப்பபோவது அடுத்து வரக் கூடிய சனிக்கிழமைகள்தான்.
ஆம், தான் செல்லும் மாவட்டங்களில் ‘மாஸ்’ குறையாமல் பார்த்துக் கொள்வதிலும், அந்தப் பிரச்சார ‘லைவ்’ வீடியோக்களில் ‘வியூஸ்’ குறையாமல் கவனித்துக் கொள்வதிலும் தனது ஒவ்வொரு சனிக்கிழமைக்காகவும் விஜய் இன்னும் நிறையவே ஹோம் ஒர்க் செய்ய வேண்டியிருக்கும்.