புதுடெல்லி: அமெரிக்க நாட்டின் எச்1பி விசாவுக்கான ஓராண்டு கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது அதிபர் டொனல்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம். இந்நிலையில், இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் யாருக்கு பொருந்தும், இதில் யாருக்கு விலக்கு என்பது குறித்து பார்ப்போம்.
எச்1பி விசாவுக்கான புதிய கட்டண விவரம் குறித்து அமெரிக்க அரசு நிர்வாகம் தெளிவுபடுத்தி உள்ளது. அதாவது எச்1பி விசா கேட்டு புதிதாக விண்ணப்பித்தவர்கள் ஒரு முறை மட்டுமே உயர்த்தப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும். மேலும், இந்த புதிய கட்டண முறை ஏற்கெனவே தங்கள் வசம் எச்1பி விசா உள்ளவர்களுக்கு பொருந்தாது என கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் இந்த விளக்கம் தற்போது எச்1பி விசா வைத்துள்ளவர்களின் தவிப்பை தணிய செய்துள்ளது.
அரசு கொடுத்துள்ள விளக்கம் என்ன? – எச்1பி விசா கட்டணம் சார்ந்த அதிபர் ட்ரம்ப்பின் அறிவிப்பு புதிதாக அந்த விசா வேண்டி வினைப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வராத செப்.21-ம் தேதிக்கு முன்பு வரை விண்ணப்பித்தவர்களுக்கு கட்டண உயர்வால் பாதிப்பு இருக்காது. அதேபோல ஏற்கெனவே இந்த விசா வைத்துள்ளவர்களும் மீண்டும் நாட்டுக்குள் வர நுழைவுக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
“எச்1பி விசாவுக்கான ஒரு லட்சம் டாலர் கட்டணம் ஆண்டுதோறும் செலுத்தும் ஆண்டு கட்டணம் அல்ல. இது ஒரு முறை மட்டுமே செலுத்த வேண்டிய கட்டணம் ஆகும். இதனால் ஏற்கெனவே இந்த விசாவை வைத்துள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் வழக்கம் போலவே அமெரிக்காவில் இருந்து வெளிநாடு சென்று வரலாம்” என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.
எச்1பி விசா: அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட சிறப்பு பணித் திறன்கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த விசா வழங்கப்படும். ஓராண்டில் 65,000 எச்1பி விசாக்களை அமெரிக்க அரசு விநியோகம் செய்கிறது.
மேலும், அமெரிக்க உயர் கல்வி நிறுவனங்களில் படித்த வெளிநாட்டு மாணவர்களுக்கு 20,000 எச்1 பி விசா வழங்கப்படுகிறது. இதன்படி, ஓராண்டில் மொத்தம் 85,000 எச்1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன. எச்1பி விசாவில் 7.50 லட்சம் பேர் இந்த விசாவை பெற்றவர்கள் அமெரிக்காவில் 3 ஆண்டுகள் வரை தங்கியிருந்து பணியாற்றலாம். தேவைப்பட்டால், மேலும் 3 ஆண்டுகள் வரை விசா காலத்தை நீட்டிக்க முடியும்.
13.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர்.. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் எச்1பி விசாவில் சுமார் 7.50 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களது மனைவி, பிள்ளைகள் என சுமார் 6 லட்சம் பேர் அமெரிக்காவில் வசிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக எச்1பி விசா அடிப்படையில் அமெரிக்கா முழுவதும் 13.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் தங்கி உள்ளனர். இந்த விசாவை பெற்றவர்களில் சுமார் 71 சதவீதம் பேர் இந்தியர்கள்.
இந்நிலையில், ரூ.1.32 லட்சமாக உள்ள எச்1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்த வகை செய்யும் ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். புதிய கட்டண நடைமுறை செப்டம்பர் இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, எச்1பி விசாவுக்கு ஓராண்டுக்கு ரூ.88 லட்சம் கட்டணம் செலுத்தவேண்டும்.