புதுடெல்லி: பிரதமர் மோடியின் தாயாரை ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியினர் அவமதித்ததாக பாஜக மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. அதோடு, “ஒரு தாயை துஷ்பிரயோகம் செய்தவர்களை பிஹார் ஒருபோதும் மறக்காது” என்றும் தெரிவித்துள்ளது.
பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிஹார் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதனிடையே, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் சார்பில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி அவமதிக்கப்பட்டதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு வீடியோவும் இணையத்தில் பேசு பொருளானது. கட்சித் தொண்டர்களின் இந்த அவமதிப்பு நடவடிக்கையை தேஜஸ்வி யாதவ் ஆதரித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “தேஜஸ்வி யாதவ் மீண்டும் மோடியின் மறைந்த தாயாரை அவமதித்துள்ளார். அவர் பிஹாரின் கலாச்சாரத்தை அவமதித்துள்ளார். இது தாய்மார்களின் உச்சபட்ச விரக்தியை தூண்டியுள்ளது. ஒரு தாயை துஷ்பிரயோகம் செய்தவர்களை பிஹார் ஒருபோதும் மறக்காது. பிஹார் மக்கள் இந்த மோசமான அரசியலை நன்கு புரிந்துகொள்கிறார்கள், மேலும் ஜனநாயக முறையில் பதிலளிப்பார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராயும், தேஜஸ்வி யாதவ் மீது கடுமையான தாக்குதலை தொடுத்துள்ளார். தேஜஸ்வியை புராணக் கதாபாத்திரங்களான “கன்ஸ்” மற்றும் “காலியா நாக்” உடன் ஒப்பிட்டு, வாக்காளர்கள் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் எச்சரித்தார்.
அதாவது அவர், “தேஜஸ்வி யாதவின் குண்டர்கள் பிரதமர் மோடியையும் அவரது தாயாரையும் திட்டுவதன் மூலம் பெரும் பாவத்தைச் செய்துள்ளனர். தேஜஸ்வி, கன்சாவைப் போல நாங்கள் உங்களை அழிப்போம். பிஹார் மக்கள் விரைவில் தங்கள் வாக்குகள் மூலம் பதிலடி கொடுப்பார்கள். நீங்கள் ‘காலியா நாகம்’ போல விஷத்தை கக்குகிறீர்கள்,” என்று தெரிவித்துள்ளார்.