புதுடெல்லி: சத்தீஸ்கரில் ஒரு பெண்கள் குழு ஏழு வருடங்களாக மீன் வளர்ப்பு தொழிலைச் செய்கிறது. ஆண்டுதோறும் 15 டன் மீன் உற்பத்தி செய்து பல லட்சம் ரூபாய் லாபமும் ஈட்டியுள்ளது இந்த குழு.
இந்தியாவின் பொருளாதாரத்தில் மீன் வளர்ப்பு தொழில் கணிசமானப் பங்கு வகிக்கிறது. இதனால், சர்வதேச அளவில் இந்தியா மீன் வளர்ப்பு தொழிலில் மூன்றாம் இடம் வகிக்கிறது. எனினும், சர்வதேச மீன் உற்பத்தியில் இந்தியாவின் அளவு ஏழு சதவிகிதம் மட்டுமே. இத்தனைக்கும் இந்த தொழிலில் மட்டும் இந்தியாவின் 14 மில்லியன் பேர் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய மாநிலங்களில் ஆந்திரா, மீன் வளர்ப்பில் முதலிடம் வகிக்கிறது. இதன் அடுத்த நிலையில் மேற்கு வங்கமும், குஜராத்தும் இடம் பெற்றுள்ளன. இம்மூன்று மாநிலங்களிலிருந்து பெருமளவு மீன்கள் ஏற்றுமதியாகின்றன. இந்த வளர்ச்சியை கண்டு தற்போது உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் மீன் தொழிலில் இறங்கியுள்ளன.
இந்நிலையில், சத்தீஸ்கரின் ஒரு பெண்கள் சுயஉதவிக்குழு கடந்த ஏழு வருடங்களாக மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 15 டன் மீன்களை இக்குழு உற்பத்தி செய்கிறது.
உற்பத்தியாகும் மீன்கள் சத்தீஸ்கரின் காண்டாய், கைராகர், துர்க் மற்றும் ராய்ப்பூர் சந்தைகளில் மொத்தமாக விற்கப்படுகின்றன. வழக்கமாக ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த இந்த தொழிலில் சத்தீஸ்கரின் பெண்களின் பங்கு வளர்கிறது.
சத்தீஸ்கரின் கைராகர்-காண்டாய்-சுய்காடன் மாவட்டத்தின் பிபாரியா நீர்த்தேக்கத்தில், இப்பெண்கள் குழு மீன் வளர்ப்பை செய்கிறது. இதில், கூண்டு வளர்ப்பு முறையிலும் மீன் உற்பத்தி ஆகிறது.
இது குறித்து சத்தீஸ்கரின் 129 பெண்கள் கொண்ட சுயஉதவிக் குழுவின் துணைத் தலைவரான மாயாதேவி கூறும்போது, “சத்தீஸ்கரில் உள்ள பெண்களும் மீன் வளர்ப்பில் வலுவான முத்திரையைப் பதித்து வருகின்றனர்.
இதன்மூலம் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ரூபாய் லாபம் கிடைக்கிறது. அனைத்து செலவுகள் மற்றும் தொழிலாளர் கட்டணங்கள் கழிக்கப்பட்ட பிறகு, குழு தோராயமாக இரண்டு லட்சம் ரூபாய் நிகர லாபத்தை ஈட்டுகிறது. கூண்டு வளர்ப்பு நுட்பங்களை அறிந்து கடந்த மூன்று ஆண்டுகளாக அதை செயல்படுத்துகிறோம். குழுவின் பெண்கள் அன்றாடம் மீன்களுக்கு உணவளித்து ஆர்வமாகப் பராமரிப்பதால் அவற்றின் உற்பத்தி அதிகரித்து வருகிறது.
மீன் வளர்ப்பு பொதுவாக ஆண்களின் தொழிலாகக் கருதப்படுகிறது, ஏனெனில் அது தண்ணீரில் நீந்துவது, வலைகளை வீசுவது மற்றும் கனமான வேலை ஆகியவற்றை உள்ளடக்கியது. இருப்பினும், பெண்கள் இப்போது ஆண்களின் பணியை முழுமையாக செய்கின்றனர். குறிப்பாக, கூண்டு வளர்ப்பு தொழில்நுட்பம் பெண்களுக்கு கூடுதல் சக்தியை வழங்கியுள்ளது.” எனத் தெரிவித்தார்.
இப்பெண்கள் குழு, கூண்டு வளர்ப்பு மூலம் பங்காசியஸ் மற்றும் திலாப்பியா மீன்களை வளர்க்கின்றனர். அதேசமயம், மீன் வளர்ப்பில் உள்ள மற்றவர்கள் ரோஹு மற்றும் கட்லா போன்ற மீன் இனங்களை பாரம்பரியமாக அணையில் வளர்க்கின்றனர்.
அணையில் மீன் வளர்க்க 4-5 ஆண்டுகள் ஆகும். அதே வேளையில், கூண்டு வளர்ப்பு முறையின் மூலம் 8 முதல் 10 மாதங்களில் சந்தையில் விற்பனை செய்யக்கூடிய அளவிற்கு மீன்கள் தயாராகி விடுகின்றன. சத்தீஸ்கரின் பெண்கள் இடையே இந்த சுயஉதவிக்குழுவின் வெற்றி கிராமப்புற பெண்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. மீன் வளர்ப்பின் வருமானம் அவர்களின் குடும்ப நிதி நிலைமையை வலுப்படுத்துவதுடன், பெண்கள் சமூகத்தில் தன்னம்பிக்கையாகவும் மாறி வருகிறது.