செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சென்னை மாநகருக்கு தினமும் கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.66.78 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கிருஷ்ணா குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ் பெறப்படும் தண்ணீரை சுத்திகரிப்பதற்காக, சென்னை அடுத்த செம்பரம்பாக்கத்தில் ரூ.296 கோடியில், தினசரி 530 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிக்கும் நிலையம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கப்பட்டு, கடந்த 2007 ஜூலை 19-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்த நிலையத்தின் முதல் வரிசை குழாய் மூலம் சென்னை மற்றும் தாம்பரம் மாநகர பகுதிகளுக்கு தினமும் 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை பெருநகரின் வளர்ச்சிக்கு ஏற்ப மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், ஏரியின் நீர் இருப்பை கருத்தில் கொண்டும் செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து முழு கொள்ளளவான 530 மில்லியன் லிட்டர் குடிநீரையும் வழங்க திட்டமிடப்பட்டது. இதற்காக, சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பூவிருந்தவல்லி புறவழிச் சாலை சந்திப்பு வரை 2-வது வரிசை குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் ரூ.66.78 கோடியில் மேற்கொள்ளப்பட்டன.
செம்பரம்பாக்கத்தில் இருந்து சென்னை மாநகருக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக, சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து போரூர் வரை (11.7 கி.மீ. நீளம்), பூவிருந்தவல்லி புறவழிச் சாலை சந்திப்பில் இருந்து கோயம்பேடு வரை (9.2 கி.மீ. நீளம்) என இரண்டு பகுதிகளாக பிரதான குழாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். டிஎன்பிஎஸ்சி மூலம் சென்னை குடிநீர் வாரியத்தில் உதவி நிலநீர் புவியியலாளர் பணியிடத்துக்கு தேர்வான 2 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, சா.மு.நாசர், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தா.கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய், பேரூராட்சிகள் இயக்குநர் எம்.பிரதீப்குமார், சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குநர் கவுரவ் குமார், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஏற்கெனவே தினசரி வழங்கி வந்த 265 மில்லியன் லிட்டர் குடிநீருடன், கூடுதலாக இத்திட்டம் மூலம் 265 மில்லியன் லிட்டர் குடிநீர் தினசரி வழங்குவதால் ஒரு நாளுக்கு 530 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படும். இதன்மூலம் அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மண்டலங்கள், தாம்பரம் மாநகராட்சி, குன்றத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நகராட்சிகளில் உள்ள 20 லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள்.
தினமும் பல்வேறு நீர்நிலைகள் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் சென்னை மாநகருக்கு 1,180 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
‘சென்னை குடிநீர்’ செயலி அறிமுகம்: மக்களின் குறைகள், புகார்களை சென்னை குடிநீர் வாரியம் விரைவாக நிவர்த்தி செய்ய புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘சென்னை குடிநீர்’ என்ற புதிய கைபேசி செயலியை மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த செயலியில் புகார்கள், குறைகளை புகைப்படத்துடன் பதிவு செய்யும் வசதி உள்ளது. இதில் பதிவாகும் புகார்கள் புவியியல் தகவல் அமைப்பு (GIS) மூலம் தானாகவே சம்பந்தப்பட்ட உதவி பொறியாளருக்கு குறுஞ்செய்தி, வாட்ஸ்- அப் மூலம் அனுப்பப்படும். புகாரின் நிலை குறித்து மக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், புகார்களை முகநூல், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்கள், க்யூஆர் குறியீடு, இணைய தளம், மின்னஞ்சல் மூலமாக மட்டுமின்றி, முதல் முறையாக 81449 30308 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.