புதுடெல்லி: அமெரிக்காவின் எச்1பி விசாவுக்கான ஓராண்டு கட்டணம் ரூ.1.32 லட்சத்தில் இருந்து திடீரென ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக, இந்திய விமான நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய மென்பொருள் பணியாளர்கள் பலரும் நவராத்திரியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர். இந்தச் சூழலில், திடீரென எச்1பி விசா கட்டணம் உயர்த்தப்பட்டு, இன்று அமலுக்கு வருவதால் அவர்கள் உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்பி வருகின்றனர்.
இதன்காரணமாக டெல்லி, மும்பை, அகமதாபாத், கொல்கத்தா உட்பட நாடு முழுவதும் விமான நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதன் எதிர்விளைவாக விமான கட்டணமும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, சைபர் தாக்குதல் காரணமாக ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில் நேற்று விமான போக்குவரத்து முடங்கியது. இதனால் ஐரோப்பிய நாடுகள் வழியாக அமெரிக்காவுக்கு செல்ல திட்டமிட்டிருந்த இந்திய பொறியாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
நிறுவனங்கள் அலர்ட்: இன்று முதல் விசா கட்டணம் உயர்த்தப்படுவதால், தாய்நாட்டுக்கு சென்றுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரும் 24 மணி நேரத்தில் அமெரிக்கா திரும்ப வேண்டும். தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ள ஊழியர்கள் சொந்த நாட்டுக்கு செல்ல வேண்டாம் என்று மெட்டா, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன.
இது தொடர்பாக அந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பி உள்ளன. இதனால், இந்தியா உட்பட தாய்நாடுகளுக்கு சென்றுள்ள ஐ.டி. ஊழியர்கள் அனைவரும் உடனடியாக அமெரிக்கா திரும்பி வருகின்றனர்.
கடந்த ஆண்டு எச்1பி விசா பெற 7.80 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 7.59 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்கப்பட்டன. குலுக்கல் அடிப்படையில் 85,000 எச்1பி விசாக்கள் வழங்கப்பட்டன. இந்த விசாவை பெறுபவர்களில் சுமார் 71-75 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டண உயர்வும் தாக்கமும்: அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட சிறப்பு பணித் திறன்கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த விசா வழங்கப்படும். ஓராண்டில் 65,000 எச்1பி விசாக்களை அமெரிக்க அரசு விநியோகம் செய்கிறது.
மேலும், அமெரிக்க உயர் கல்வி நிறுவனங்களில் படித்த வெளிநாட்டு மாணவர்களுக்கு 20,000 எச்1 பி விசா வழங்கப்படுகிறது. இதன்படி, ஓராண்டில் மொத்தம் 85,000 எச்1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன. எச்1பி விசாவில் 7.50 லட்சம் பேர் இந்த விசாவை பெற்றவர்கள் அமெரிக்காவில் 3 ஆண்டுகள் வரை தங்கியிருந்து பணியாற்றலாம். தேவைப்பட்டால், மேலும் 3 ஆண்டுகள் வரை விசா காலத்தை நீட்டிக்க முடியும்.
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் எச்1பி விசாவில் சுமார் 7.50 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களது மனைவி, பிள்ளைகள் என சுமார் 6 லட்சம் பேர் அமெரிக்காவில் வசிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக எச்1பி விசா அடிப்படையில் அமெரிக்கா முழுவதும் 13.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் தங்கி உள்ளனர். இந்த விசாவை பெற்றவர்களில் சுமார் 71 சதவீதம் பேர் இந்தியர்கள்.
இந்நிலையில், ரூ.1.32 லட்சமாக உள்ள எச்1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்த வகை செய்யும் ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். புதிய கட்டண நடைமுறை செப்டம்பர் 21-ம் தேதி (இன்று) முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, எச்1பி விசாவுக்கு ஓராண்டுக்கு ரூ.88 லட்சம் கட்டணம் செலுத்தவேண்டும். இந்த புதிய நடைமுறையால் லட்சக்கணக்கான இந்தியர்கள், குறிப்பாக கணினி மென்பொருள் துறையினர் பாதிக்கப்படுவார்கள் என அஞ்சப்படுகிறது.