துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பங்கேற்றார். 12 நிமிடங்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் 6 கேள்விகள் கேட்கப்பட்டன.
இதில் எந்த இடத்திலும் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் அணியின் பெயரை குறிப்பிடவில்லை. ஆனால் 140 கோடி ரசிகர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பானதாக இருக்கும் என அவர், தெரிவித்தார். இதுதொடர்பாக சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: ஆசிய கோப்பை தொடருக்காக சிறந்த முறையில் தயாரானோம். மூன்று சிறந்த ஆட்டங்களை விளையாடி உள்ளோம். சிறந்த முடிவை பெறுவதற்கு என்ன செய்ய முடியுமோ அதில் கவனம் செலுத்துகிறோம். கடந்த 3 ஆட்டங்களிலும் நாங்கள் செய்துள்ள நல்ல பழக்கங்களை தொடர விரும்புகிறோம்.
இந்த தொடரில் நாங்கள் ஒருமுறை விளையாடியுள்ளோம் (பாகிஸ்தான் அணிக்கு எதிராக என்பதை கூறவில்லை). அதில் நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஆனால், அது எங்களுக்கு சாதகத்தை தராது. நாங்கள் புதிதாகத் தொடங்க வேண்டும், யார் நன்றாக விளையாடுகிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள்.
நாங்கள் இப்போது மூன்று ஆட்டங்களில் விளையாடியுள்ளோம், மூன்றிலும் வெற்றி பெற்றது சம அளவிலான மகிழ்ச்சியாக உள்ளது. ஓமனுக்கு எதிரான ஆட்டம் எங்களது முந்தைய ஆட்டத்தைப் போலவே மிகவும் வேடிக்கையாக இருந்தது. கடந்த போட்டியில் பேட்டுக்கும் பந்துக்கும் இடையே நல்ல போட்டி இருந்தது. கடந்த முறை நாங்கள் வெற்றி பெற்றோம், ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். எங்கள் நாட்டின் ஆதரவு எங்களுக்கு எப்போதும் கிடைக்கும். நாங்கள் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் எங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.
ஞாயிற்றுக்கிழமை, அதிகமான மக்கள் போட்டியைப் பார்ப்பார்கள். அவர்கள் உட்கார்ந்து விளையாட்டை ரசிக்க வேண்டும். மைதானத்தில் அதே தீவிரத்துடனும், அதே ஆற்றலுடனும் விளையாடுவோம். எப்போதும் போன்று உயர்தர ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வோம். 140 கோடி ரசிகர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பானதாக அமையும். இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.