திருப்பதி: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது திருப்பதி உண்டியல் பணத்தில் ரூ.100 கோடி திருடப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து சிஐடியிடம் ஒப்படைத்துள்ளது.
திருமலையில் ஏழுமலையான் கோயிலில் உண்டியல் பணம் எண்ணும் இடமான ‘பரகாமணி’யில் தேவஸ்தான ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தன்னார்வலர்கள் (ஆண்கள் மட்டும்) உண்டியல் பணத்தை எண்ணுவது வழக்கம். முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது, தேவஸ்தான ஊழியர் ரவிக்குமார் என்பவர், உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் வெளிநாட்டு கரன்சிகளை திருடி வந்துள்ளார். உண்டியல் பணத்தை எண்ணும்போது அடிக்கடி கழிப்பறைக்கு சென்ற அவர், வெளிநாட்டு கரன்சியை பிளாஸ்டிக் கவரில் வைத்து ஆசன வாயில் திணித்து திருடி வந்துள்ளார்.
ஒருநாள் கண்காணிப்பு கேமரா உதவியுடன் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, சுமார் ரூ.100 கோடி வரை வெளிநாட்டு கரன்சிகளை அவர் திருடியது தெரியவந்தது. திருடிய பணத்தில் திருப்பதியில் வீடு, நிலம் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு திருப்பதி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு திடீரென லோக் அதாலத் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு திருப்பதி தேவஸ்தானமும், ஊழியர் ரவிக்குமாரும் சமரசம் செய்து கொண்டனர். திருடிய பணத்தில் வாங்கிய சொத்துகளை மீண்டும் தேவஸ்தானத்துக்கே வழங்க ரவிக்குமார் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து, வழக்கை லோக் அதாலத் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், ரவிக்குமார் ரூ.100 கோடி அளவுக்கான சொத்துகளை தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கவில்லை. அப்போதைய அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி மற்றும் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் ரவிக்குமாரிடம் இருந்து சில சொத்துகளை தங்களது பினாமிகளின் பெயர்களுக்கு எழுதி வாங்கிக் கொண்டதாக புகார்கள் எழுந்துள்ளன.
கடந்த ஆண்டு ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். இந்த சூழலில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினரும், பாஜக செய்தி தொடர்பாளருமான பானுபிரகாஷ் ரெட்டி நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டார். திருமலையில் பணம் எண்ணும் இடத்தில் ஊழியர் ரவிக்குமார் யாருக்கும் தெரியாமல் வெளிநாட்டு கரன்சியை தனது டிராயரில் மறைத்து வைக்கும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பானுபிரகாஷ் ரெட்டி கூறியதாவது: ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலராக இருந்த அப்போதைய திருப்பதி எம்எல்ஏ கருணாகர் ரெட்டியும், நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியும் இணைந்து சுவாமியின் பணத்தை பல வழிகளில் கொள்ளை அடித்துள்ளனர். அன்னதான பொருட்கள், நெய், லட்டு பிரசாதம், தரிசன டிக்கெட் என பலவற்றை உதாரணமாக கூறலாம். கடைசியில் சுவாமியின் உண்டியல் பணத்தைகூட இவர்கள் விட்டு வைக்கவில்லை. உண்டியல் பணத்தை திருடியவரிடம் இருந்து இவர்கள் திருடியுள்ளனர். ரூ.100 கோடி திருட்டு வழக்கை லோக் அதாலத்தில் பஞ்சாயத்து செய்து சமரசம் செய்துள்ளனர். லோக் அதாலத்தில் சிறுசிறு வழக்குகளில் இரு தரப்பினர் இடையே சமரசம் செய்து வழக்கை தீர்த்து வைப்பது வழக்கம். ஆனால், சுவாமியின் ரூ.100 கோடி பணத்தை திருடிய வழக்கை லோக் அதாலத் நீதிமன்றம் எவ்வாறு தீர்த்து வைக்க முடியும்.
எனவே, இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து சிஐடியிடம் ஒப்படைத்துள்ளது. இதில் கண்டிப்பாக குற்றவாளிகள் சிக்குவார்கள். ஆனால், ரவிக்குமாரின் உயிருக்கு போலீஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இந்த விவகாரம் ஆந்திரா மட்டுமின்றி, தெலங்கானாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.