சென்னை: நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் ஆங்கிலேயர்களின் கல்விமுறையை பின்பற்றுவது வேதனை அளிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
சென்னை ஐஐடி, ‘திங்க் இந்தியா’ அமைப்பு சார்பில்‘தேசிய மறுமலர்ச்சிக்கான தொழில்முனைவு மற்றும் செயற்கை நுண்ணறிவு’ என்ற தலைப்பிலான 2 நாள் மாநாடு (தக்ஷினபதா 2025) நேற்று தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: சுதந்திரம் அடைந்தபோது உலகப் பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இருந்தோம். பிறகு படிப்படியாக பின்தங்கி 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டோம். கடந்த 2014-ம் ஆண்டு மோடி பிரதமர் ஆனதும் புதிய இந்தியா பிறந்தது. தற்போது உலகப் பொருளாதாரத்தில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். வறுமை, வன்முறை குறைந்துள்ளது.
கடந்த 2014-ல் 400 ஸ்டார்ட்-அப்நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 2 லட்சத்தைதாண்டியுள்ளது. வேகமாக வளரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். முன்பு வெளிநாட்டு ஆதாரங்களையே நமது ராணுவம் சார்ந்திருந்தது. பாகிஸ்தானின் அணுஆயுத மிரட்டலுக்கு முந்தைய ஆட்சியாளர்கள் அச்சப்பட்டனர். தற்போது நிலைமை மாறிவருகிறது. ராணுவ ரீதியில் பலம்பொருந்திய நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் நமது ராணுவ பலத்தை உலகுக்கு காட்டியுள்ளோம். முந்தைய ஆட்சியாளர்கள் இதுபோன்ற துணிச்சலான நடவடிக்கையை எடுத்திருக்க சாத்தியமே இல்லை.
பாரதம் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு வியாபாரத்துக்கு வந்த ஆங்கிலேயர்கள் நமது பண்பாடு, கலாச்சாரத்தை அழித்தனர். சுதந்திரம் அடைந்த பிறகும், அவர்களது கல்விமுறையை பின்பற்றுவது வேதனைக்குரியது. ஆன்மிகம்தான் இந்த தேசத்தின் ஆன்மா. ஒவ்வொரு இளைஞரும் இந்த நாட்டின் சொத்து. அவர்களது பங்களிப்பு மூலம் நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடையும். சில அமைப்புகள் பாரதம் குறித்து தவறான கருத்துகளை பரப்புகின்றன. தேசத்தை சிதைக்கமுயற்சி செய்கின்றனர். நாம்பல்வேறு சவால்களை கவனமாக எதிர்கொண்டு வந்துள்ளோம். நம் நாட்டில் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் இருந்தாலும், நம் இதயத் துடிப்பு ஒன்றுதான். பல்வேறு உணவு முறைகள், கலாச்சாரங்கள் இருந்தாலும் பாரதம் ஒன்றுதான். இவ்வாறு அவர் பேசினார்.