புதுடெல்லி: டெல்லியில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ அறிவியல் மையம் மற்றும் டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையின் 11-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதில் தேசிய மருத்துவ ஆணைய தலைவர் டாக்டர் அபிஜத் ஷேத் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி நாடு முழுவதும் மருத்துவர்களின் எண்ணிக்கையை சீராக உயர்த்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களின் விகிதத்தையும் 1:1 என்பதை அடைவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதன் மூலம் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவின் சுகாதார அமைப்பின் தரம் உயரும். திறன் அடிப்படையிலான மருத்துவ கல்வியின் தேவைகளை நிறைவேற்ற புதிய நடவடிக்கைகளை மருத்துவ அறிவியல் தேர்வு வாரியமும், தேசிய மருத்துவ ஆணையமும் அறிமுகம் செய்து வருகிறது. மாணவர்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்தி, வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்ளும் நபர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டாக்டர் சுனிதா சர்மா பேசுகையில், ‘‘இன்று மருத்துவர் பட்டம் பெற்றவர்கள், மற்றவர்களை குணப்படுத்தும் பொறுப்பை ஏற்று நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும். உங்கள் பணி உணர்வுடனும், சிறப்பாகவும் இருக்கட்டும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பணிவுடன் இருந்து மனித குலத்துக்கு சேவையாற்ற வேண்டும்’’ என்றார்.