புதுடெல்லி: டெல்லி போலீஸார் அண்மையில் அப்தாப் குரேஷி என்ற தீவிரவாதியை கைது செய்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியின் இஸ்லாம் நகரிருள்ள தபாராக் என்ற ஓட்டலில் அண்மையில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் தீவிரவாதி அஷார் டேனிஷ் உட்பட 13 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த டேனிஷ், போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகி வரும் இளைஞர் எனத் தெரியவந்தது. ஆனால், இந்த பாழடைந்த ஓட்டலில் 15-ம் எண் அறையில் தங்கியிருந்து வெடிகுண்டுகளை தயார் செய்து வந்துள்ளார் டேனிஷ். இந்த வெடிகுண்டுகளை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்காக அவர் தயாரித்து வந்துள்ளார். தற்போது இவர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம் வெடிகுண்டுகளைத் தயாரித்து தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்தும் கும்பல் முழுவதும் பிடிபட்டுள்ளது.
இவர்கள் வெடிகுண்டுகளைத் தயாரித்து பாஜக மூத்த தலைவர்களை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர். டேனிஷின் அறையிலிருந்து வெடிகுண்டு தயாரிக்கப்படும் கன் பவுடர், பொட்டாசியம் நைட்ரேட், நாட்டு துப்பாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஆண்டு இவர் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.