சென்னை: தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக வேட்பாளர்களை நிறுத்தாத மமக, கொமதேக உள்ளிட்ட 42 அரசியல் கட்சிகளின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 29–ன்கீழ் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி, வருமானவரி விலக்கு, பொதுதேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை, சின்னங்கள் ஒதுக்கீடு, நட்சத்திர பிரச்சார நியமனம் ஆகிய சலுகைகளை பெற முடியும். பதிவு செய்யப்பட்ட கட்சியானது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டபடி தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். பல கட்சிகள், தேர்தல்ஆணையத்தால் நடத்தப்படும்பொதுத்தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்தாதது தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு வந்தது.
இக்கட்சிகள் தேர்தலில் போட்டியிடாமல், பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு வழங்கப்படும் வருமானவரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளை மட்டும் அனுபவித்து வருவது தெரியவந்தது. பல கட்சிகள், பதிவு செய்த முகவரியில் கட்சி அலுவலகம் கூட வைக்காமல் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இக்கட்சிகள் ஆண்டு வரவு, செலவு கணக்கையும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து,தொடர்ந்து 6 ஆண்டுகளாக பொதுத்தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்தாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளை கண்டறிந்து, அவற்றிடம் உரிய விளக்கம் கேட்டு, அது தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி நாடு முழுவதும் கடந்த 6 ஆண்டுகளாக தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்தாக 474 கட்சிகள் அடையாளம் காணப்பட்டு, ஏன் இந்த கட்சிகளின் பதிவை ரத்து செய்யக்கூடாது என மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலமாக விளக்கம் கேட்டிருந்தனர். அந்த விளக்கங்களை பரிசீலித்து அவர்கள் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். அதனடிப்படையில் நாடு முழுவதும் 474 பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் மட்டும் 42 கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதில், எம்எல்ஏ ஜவாஹிருல்லா தலைவராக உள்ள மனிதநேய மக்கள் கட்சி, எம்எல்ஏ ஈ.ஆர்.ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சி, எர்ணாவூர் நாராயணனின் சமத்துவ மக்கள் கழகம், ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. இதில் ஜவாஹிருல்லா, ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் தொடர்ந்து திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.