புதுடெல்லி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 413 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்திய மகளிர் அணி விரட்டியது.
புதுடெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் வீராங்கனைகள் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். அந்த அணியின் தரப்பில் பெத் மூனி 138, ஜார்ஜியா 81, எல்லீஸ் பெர்ரி 68 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 412 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலிய அணி.
இந்த ஆட்டத்தில் 413 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. நித்திய தரப்பில் ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் எடுத்தனர். இதில் ஸ்மிருதி மந்தனா 63 பந்துகளில் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 47 ஓவர்களில் 369 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது. இதன் மூலம் 43 ரன்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரையும் ஆஸி வென்றுள்ளது. இந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் பிங்க் நிற ஜெர்ஸி அணிந்து விளையாடினர்.
வரும் 30-ம் தேதி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு முன்தயாரிப்பாக அமைந்துள்ளது.