புதுடெல்லி: நடிகர் மோகன்லாலுக்கு, 2023-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறும் 71-வது தேசிய விருதுகள் விழாவில், இவ்விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.
இந்திய சினிமாவில் ஆகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மோகன்லால். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார். இவர் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரைப்படத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக 2001-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 20190ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், சினிமாவுக்கு அவர் அற்றிய பங்களிப்பை சிறப்பிக்கும் விதமாக, இந்திய சினிமாவில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருதை அவருக்கு அறிவித்துள்ளது மத்திய அரசு. செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறும் 71-வது தேசிய விருதுகள் விழாவில், இவ்விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு, நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு 2022-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மோகன்லால் கடந்து வந்த பாதை:
எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதிய கட்டுரையில் இருந்து சில பகுதிகள்: மோகன்லால் தனது நெடும்பயணத்தில் நடிப்பில் பல உச்சங்களைத் தொட்டவர். காலத்தை வென்ற பல திரைக் காவியங்களில் நடித்து இந்திய சினிமாவின் புகழைப் பல படிகள் உயர்த்தி வருபவர். மலையாள சினிமாவில் இன்று வரை உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
1980-களின் தொடக்கத்தில் நடிக்கத் தொடங்கிய மோகன்லால் முதலில் வில்லனாகவும், துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தவர். அதன் பிறகு படிப்படியாக நாயக நடிகராக உயர்ந்தார். அரவிந்தன், ஹரிஹரன். பத்மராஜன், பரதன், லோஹிததாஸ் என மலையாள சினிமாவின் எழுத்தாளர்கள் இயக்குநர்களுடன் கரம் கோத்து தன் அசாத்திய நடிப்புத் திறமையை எண்ணற்ற படங்களில் வெளிப்படுத்தி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார்.
1989-ல் லோகிததாஸ் எழுதி சிபி மலையில் இயக்கத்தில் வெளியான ‘கிரீடம்’ மோகன்லாலின் திரைவாழ்வில் மட்டுமல்லாமல் மலையாள சினிமா வரலாற்றிலும் முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. அந்தப் படத்தில் காவலரான தந்தையின் ஆசைப்படி காவல் துறையில் சேர முயன்று சூழ்நிலையால் கொலையாளியாகும் எளிய மனிதனின் கதாபாத்திரத்தில் அவ்வளவு சிறப்பாக நடித்திருப்பார் மோகன்லால்.
இறுதிக் காட்சியில் கொலை செய்துவிட்ட பிறகு தந்தையைப் பார்த்து அவர் கதறி அழும் காட்சி இந்திய சினிமாவில் ஓர் பொன்னோவியமாக இடம்பெறத்தக்கது. இந்தப் படத்தில் நடித்ததற்காக நடிப்புக்கான சிறப்புப் பாராட்டு (Special Mention) தேசிய விருது கிடைத்தது. இதுவே மோகன்லால் பெற்ற முதல் தேசிய விருது.
அடுத்ததாக ‘பரதன்’ (1991), ’வானப்பிரஸ்தம்’ ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார் மோகன்லால். இவற்றில் ‘வானப்பிரஸ்தம்’ சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது. மோகன்லால் இதில் கதக்களி கலைஞராக நடித்திருந்தார். 2016-ல் இன்னொருமுறை சிறப்புப் பாராட்டு தேசிய விருதைப் பெற்றார். இவை தவிர கேரள அரசு விருது, ஃபிலிம்ஃபேர் விருது என பல விருதுகளைக் குவித்துள்ளார்.
1990-களில் தமிழ்ப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். ப்ரியதர்ஷன் இயக்கிய ‘சிறைச்சாலை’, மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ ஆகிய படங்கள் தமிழ் ரசிகர்கள் மனங்களில் அவரை அரியாசனத்தில் அமர்த்தின. ‘இருவர்’ படத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக அரசியலில் தோல்வியே அடையாத முதல்வராகவும் கொடிகட்டிப் பறந்த எம்ஜிஆரை அடிப்படையாகக் கொண்டு உருவாகப்பட்ட ஆனந்தன் கதாபாத்திரத்தில் ஓர் எளிய மனிதன் ஒரு மாநிலத்தின் கோடிக் கணக்கான மக்களால் கடவுளுக்கு இணையாகக் கொண்டாடப்படும் தலைவனாக உருவாகும் பயணத்தை அவ்வளவு சிறப்பாகவும் உயிர்ப்புடனும் நிகழ்த்திக் காட்டினார்.
‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் கமிஷனராக கமல்ஹாசனுடன் போட்டி போட்டு நடித்திருப்பார். அந்த இரு பெரும் நடிப்பாளுமைகளை ஒரே படத்தில் பார்த்து ரசிப்பதே ரசிகர்களுக்குப் பேரானந்த அனுபவமாக இருந்தது. ‘ஜில்லா’ படத்தில் விஜய்யின் தந்தையாக படம் முழுவதும் வெள்ளை வேட்டி சட்டையில் தோன்றி கம்பீரமான தோற்றத்தினாலேயே ரசிகர்களை ஈர்த்தார். தெலுங்கு, கன்னடம். இந்தி மொழிப் படங்களிலும் நடித்துவருகிறார்.
2000-ம் ஆண்டுக்குப் பிறகும் தன் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்த மோகன்லால் கடந்த பத்தாண்டுகளில் புதிய அலை இயக்குநர்களுடன் இணைந்து தன்னைக் காலத்துக்கேற்ப தகவமைத்துக்கொண்டுவருகிறார். 2013-ல் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் மலையாள சினிமா வரலாற்றில் மிகப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றதோடு தமிழ் உட்பட பல மொழிகளில் மறு ஆக்கம் கண்டது. மோகன்லாலின் நட்சத்திர அந்தஸ்தை மீட்டெடுத்தது அந்தப் படத்தின் வெற்றி.
அந்தப் படத்திலும் ஒரு படிப்பறிவில்லாத சினிமா பார்த்து சாதுரியத்தை வளர்த்துக்கொண்ட எளிய குடும்பத் தலைவனைக் கண்முன் நிறுத்தியிருந்தார் மோகன்லால். எதிர்பாராவிதமாக கொலை செய்துவிட்ட தன் மகளையும் மனைவியையும் காப்பாற்ற வேண்டிய ஜார்ஜ்குட்டியின் பதற்றம் பார்வையாளர்களையும் தொற்றிக்கொண்டதே அந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணம். அதற்கு மோகன்லாலின் நடிப்பே முதன்மைக் காரணம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
ஒரு நடிகராக கதாபாத்திரத்தின் தன்மையை அப்படியே உள்வாங்கி அதைக் கண்கள் மற்றும் உடல்மொழி மூலம் வெளிப்படுத்தும் நடிப்புப் பாணியில் உச்சம் தொட்டவர் மோகன்லால். இந்திய சினிமாவில் கண்களில் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் அவரை மிஞ்சியவர் யாரும் இல்லை எனலாம். அந்த வகையில் மோகன்லாலை ஒரு நடிப்பு மேதை என்று மிகையின்றிச் சொல்லலாம்.