ஹாங்காங்: இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்த பெரிய வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, ஹாங்காங்கில் இருந்து இரவோடு இரவாக ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.
ஹாங்காங்கில் கட்டுமானத் தளம் ஒன்றில் இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்த பெரிய வெடிகுண்டின் எஞ்சிய பகுதி கண்டெடுக்கப்பட்டது. அமெரிக்காவால் தயாரிக்கப்பட்டது என கூறப்படும் நிலையில், இந்த வெடிகுண்டு கிட்டத்தட்ட ஒன்றரை மீட்டர் நீளமும் ஏறக்குறைய 450 கிலோ கிராம் எடையும் கொண்டது என்று ஹாங்காங்ஹ் காவல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய ஹாங்காங் காவல் துறை அதிகாரி ஒருவர், “வெடிகுண்டை அகற்றுவதில் ஆபத்து இருக்கிறது. இது இரண்டாம் உலகப் போர் காலத்து வெடிகுண்டு என்பதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். பாதுகாப்பு நலன் கருதி 18 குடியிருப்புக் கட்டடங்களிலிருந்து சுமார் 6,000 பேரை வெளியேற்றத் திட்டமிட்டோம். வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் தொடங்கி சனிக்கிழமை காலை 11.30 மணி வரை நீடித்தது. இந்த நடவடிக்கையால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை” என்றார்.
இரண்டாம் உலகப் போரின்போது ஹாங்காங்கையும் ஜப்பான் குறிவைத்தது. ஜப்பானியர்களுக்கும், கூட்டணிப் படையினருக்கும் இடையில் அப்போது கடுமையான மோதல் நடந்ததாக கூறப்படுகிறது. தற்போதும் கூட, ஹாங்காங்கில் கட்டுமான ஊழியர்கள், நெடுந்தூர நடைப்பயணம் மேற்கொள்பவர்கள் வெடிக்காத குண்டுகளைக் கண்டெடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
2018-ஆம் ஆண்டில், வான் சாய் மாவட்டத்தில் இதேபோன்ற ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது, இதனால் 1,200 பேர் வெளியேற்றப்பட்டனர். அதை அகற்ற சுமார் 20 மணி நேரம் ஆனது குறிப்பிடத்தக்கது.