பெங்களூரு: பெங்களூரு சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் குறித்த விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில், ‘சாலைகளில் உள்ள பள்ளங்களை யாரும் உருவாக்குவதில்லை, இயற்கை காரணங்களாலும், கனமழையாலும் அவை உருவாகின்றன’ என்று கர்நாடக துணை முதல்வரும், பெங்களூரு நகர மேம்பாட்டு அமைச்சருமான டி.கே. சிவகுமார் கூறினார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், “சாலையில் ஏற்பட்ட பள்ளங்கள் தொடர்பான பிரச்சனையைத் தீர்க்க நாங்கள் இங்கே இருக்கிறோம். பாஜக இதில் அரசியல் செய்கிறது; அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். இன்று மாலை, முதல்வர் சித்தராமையாவும் இது குறித்து ஒரு கூட்டத்தை நடத்துகிறார்.
பள்ளங்கள் இயற்கையால் ஏற்படுகின்றன; யாரும் அவற்றை உருவாக்க விரும்பவில்லை. பெங்களூருவில் வாகனங்களின் அதிகரிப்பு, அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிக மழை காரணமாக அதிகளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.
நாங்கள் ஏற்கனவே 7,000 க்கும் மேற்பட்ட பள்ளங்களை நிரப்பிவிட்டோம், பெங்களூருவின் சாலைகளில் இன்னும் 5,000 க்கும் மேற்பட்ட பள்ளங்கள் உள்ளன. பள்ளங்களின் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல் ஆணையரிடம் கேட்டுள்ளோம்.
இதில் பாஜக அரசியல் செய்வதை எங்களால் தடுக்க முடியாது. அவர்கள் சாலை மறியல் செய்யட்டும் அல்லது அவர்கள் விரும்பியதைச் செய்யட்டும். தீர்வுகளைக் காண நாங்கள் இங்கே இருக்கிறோம். விருப்புரிமை என்னுடையதாக இருந்தாலும் கூட, அனைத்து பாஜக எம்எல்ஏக்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கியுள்ளேன்.
அந்த நிதியை கொண்டு பாஜக எம்எல்ஏக்கள் ஏன் பள்ளங்களை நிரப்பவில்லை? இப்போதும் கூட, பள்ளங்களை சரிசெய்ய ரூ.25 கோடியை ஒதுக்கியுள்ளோம். எனவே அவர்கள் தங்கள் வேலையைச் செய்யட்டும்” என்று கூறினார்
முன்னதாக நேற்று, மோசமான சாலை உள்கட்டமைப்பு காரணமாக பெங்களூருவை விட்டு வெளியேறும் ஐடி நிறுவனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த டி.கே.சிவகுமார், “அரசாங்கத்தை யாரும் அச்சுறுத்த முடியாது. யாரும் வெளியேறுவதை நான் தடுக்க மாட்டேன்.” என்று கூறியிருந்தார்.
கர்நாடகாவின் மோசமான சாலை உள்கட்டமைப்பைக் கண்டித்து, செப்டம்பர் 24 ஆம் தேதி பெங்களூரு உட்பட கர்நாடகா முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரு மணி நேர சாலை மறியலில் ஈடுபடப்போவதாக பாஜக அறிவித்துள்ளது.