காசா: ”இந்தத் தருணத்தில் மரணத்தைவிட இரக்கமானது எங்களுக்கு எதுவுமில்லை”. – இது காசா நகரின் 38 வயது நிரம்பிய முகமது நாசர் கூறியுள்ள வார்த்தைகள். இன்றைய நிலவரப்படி காசாவில் 65,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இன்று மட்டும் புதிதாக 51 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்தான் அங்கிருந்து இப்படியொரு வேதனைக் குரல் ஒலித்துள்ளது.
அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் அதிகமானோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல் இன்றுவரை தொடர்ந்து தாக்கி வருகிறது. ஹமாஸ்களை முழுமையாக அழிக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என்பதே இஸ்ரேலின் முழுக்கமாக இருக்கிறது. இந்த உறுதிப்பாட்டை முன்வைத்தே இடையில் லெபனான், சிரியா, ஏமன், ஈரான், கத்தார் எனப் பல நாடுகளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவிட்டது.
இதில் காசாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருக்கிறது. காசாவில் வான்வழித் தாக்குதல் எவ்வளவு சேதாரத்தை விளைவிக்க முடியுமோ அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்திவிட்ட நிலையில், தற்போது தரைவழித் தாக்குதலையும் தீவிரப்படுத்தியுள்ளது. இன்று நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று மட்டும் பல்வேறு தாக்குதல்கள் மூலம் காசாவாசிகள் 51 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று நிவாரண முகாம்களாக மாற்றப்பட்ட பள்ளிக்கூடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை நடத்திவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பாலஸ்தீனியர்கள் அல் மவாசி பகுதிக்குப் பெயரும்படி இஸ்ரேல் படைகள் வலியுறுத்தி வருகின்றன. அங்கு மனிதாபிமான உதவிகள், மருத்துவ உதவிகள் கிடைக்கும் என்று வலியுறுத்துகின்றனர். இதுவரை காசாவில் இருந்து 4,50,000-க்கும் அதிகமானோர் வெளியேறிவிட்டனர். எஞ்சியிருப்பவர்களில் சிலர் வெளியேற ஆசைப்படுகின்றனர். ஆனால், தங்களிடம் பசிக்கு ரொட்டி வாங்கக் கூட பணமில்லை எங்கே செல்வது என்று கேட்கின்றனர். இன்னும் சிலர், நாங்கள் எங்கே செல்ல முடியும். இது எங்கள் மண். மரணம் வரும்வரை இங்கேயே இருக்கிறோம் என்று கூறுகின்றனர்.
பிணைக் கைதிகள் படங்கள் வெளியீடு: இதற்கிடையில், ஹமாஸ் அமைப்பின் காசிம் பிரிகேட், 48 பிணைக் கைதிகளின் படங்கள் அடங்கிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் ‘வழியனுப்பும் படம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதில் ஒவ்வொரு பிணைக் கைதிக்கும் ரான் அராட் என்றே பெயரே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ரான் அராட் என்பவர் 1986-ம் ஆண்டு லெபனானில் மாயமான இஸ்ரேலிய விமானப் படை தளபதி. அவர், ஹமாஸ்களால் சிறை பிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அவரைப் பற்றிய எந்தத் தவலும் இன்றளவும்வெளியாகவில்லை. இந்நிலையில், அந்தப் பெயர் 48 பிணைக் கைதிகளுக்கும் ஹமாஸ் வைத்துள்ளது ஏதோ எச்சரிக்கை சமிக்ஞை போலவே உள்ளது.
ஏற்கெனவே காசா நகரை இஸ்ரேலிய படைகள் சிதைப்பதை தொடர்ந்தால் பிணைக் கைதிகள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று ஹமாஸ் எச்சரித்திருந்தது. இந்நிலையில், அதை உறுதிப்படுத்துவது போல் 48 பேர் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டரை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கு குவியும் கண்டனம்: காசா மீதான தாக்குதல் தொடங்கியதிலிருந்தே இன்றைக்கு வரை ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் வெகுக் குறைவாகவே இஸ்ரேலை தட்டிக் கேட்டுள்ளனர். பேரழிவு நடந்து கொண்டிருக்கும்போது இதுபோன்ற மவுனம் கூடாது என்று கண்டனங்கள் எழுந்துள்ளன. காசாவில் இஸ்ரேல் செய்தது இனப் படுகொலை என்றும், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரிலேயே இது நடந்தது என்றும் ஐ.நா. விசாரணை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
காசாவில் தினசரி ஐந்தில் ஒரு வீட்டிலும், மூன்றில் ஒரு குழந்தையிடமும், ஒவ்வொரு 10,000 பேரில் இருவர் என பசி காரணமாகவும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் உயிரிழப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காசாவில் உணவு பஞ்சம் நிலவுவதாக ஐ.நா தெரிவித்துள்ளது. பட்டினியால் மட்டும் 164 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 32 பேர் குழந்தைகள்.
ஆனால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காசா போரை நிறுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா நீர்த்துப் போகச் செய்தது. இதனை சுட்டிக்காட்டி அமெரிக்காவுக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. போரை நிறுத்த ஐ.நா. போதிய அளவில் செயல்படவில்லை என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.