புதுடெல்லி: எச்-1பி விசா விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், “நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியாவில் பலவீனமான பிரதமர் இருக்கிறார்” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த சில மாதங்களாகவே வர்த்தக ரீதியிலான மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் தான், அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாக்களுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக ( இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம் ) உயர்த்தும் உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டிருக்கிறார். இது இந்தியர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
எச்-1பி விசா திட்டம் தற்போது மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் விசாக்களில் ஒன்றாக உள்ளது என அமெரிக்கா சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டாலும், இது இந்தியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலுக்கு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் எதிர்வினை ஆற்றி உள்ளனர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்த உத்தரவு குறித்த செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் எம்.பி ராகுல் காந்தி, “நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியாவில் பலவீனமான பிரதமர் இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
பின்னர், காங்கிரஸ் கட்சியின் எம்.பி மணீஷ் திவாரியும் இது குறித்து, “அமெரிக்கா திட்டமிட்டு இந்தியாவை தாக்கி வருகிறது. இது இந்தியா – அமெரிக்க உறவுகளுக்கு நல்லதல்ல” என்று எச்சரித்துள்ளார்.
இதனிடையே, மூத்த காங்கிரஸ் தலைவர் பவன் கேரா, “இது ஒரு புதிய நிகழ்வு அல்ல. ஜூலை 5, 2017 அன்று, ராகுல் காந்தி ட்வீட் செய்து, இது போன்று ஒரு சம்பவம் நடக்கப் போகிறது. ஏதாவது செய்யுங்கள் என பிரதமர் மோடியை எச்சரித்தார். ஆனால் அவர் அன்றும், இன்றும் பலவீனமான பிரதமராகத் தான் இருக்கிறார். இந்த நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்கள் இழப்பைச் சந்திக்கப் போகிறார்கள்… ட்ரம்ப் ஒவ்வொரு நாளும் நம்மை அவமதித்து வருகிறார். ஆனால் பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.