திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள அரசும் திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து நடத்தும் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சி பம்பையில் இன்று காலை தொடங்கியது. முதல்வர் பினராயி விஜயன் சங்கமத்தை தொடங்கிவைத்தார். இதில், தமிழக அமைச்சர்கள் சேகர் பாபு, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், “காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப நாம் சிந்திக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டே 2011-12ம் ஆண்டில் சபரிமலை மாஸ்டர் பிளான் தொடங்கப்பட்டது. மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ரூ.148.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த திட்டத்தை தடுக்க சிலர் நீதிமன்றத்துக்குச் சென்றனர். இது துரதிருஷ்டவசமானது. ஐயப்பன் மீதான பக்தியா, வனப் பாதுகாப்பு மீதான அக்கறையா, மத தூய்மையா? ஆனால், இவை எதுவும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.
2019ம் ஆண்டு கோவிட் பெருந்தொற்று நெருக்கடியின்போது, தேவசம்போர்டின் தினசரி செயல்பாடு கூட நெருக்கடியில் இருந்தது. அந்த நேரத்தில், அரசாங்கம், வாரியத்துக்கு ரூ.140 கோடி நிதி உதவியை வழங்கியது. மேலும், புதுப்பித்தல் பணிக்காக ரூ.123 கோடியை வழங்கியது. சபரிமலையின் அடிப்படை முகாமாக உள்ள நிலக்கல்லின் மேம்பாட்டுத் திட்டத்துக்கு 2020ல் ஒப்புதல் வழங்கப்பட்டது. கடந்த ஜனவரியில் சன்னிதானம் மற்றும் பம்பா ஆகிய இரண்டுக்குமான மலையேற்றப் பாதைகளை மேம்படுத்த அரசாங்கம் ஒப்புதல் வழங்கியது.
சபரிமலை மாஸ்டர் பிளான் என்பது சன்னிதானம், பம்பா, பாரம்பரிய பாதைகள், நிலக்கல் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை மையமாகக் கொண்டது. 2050-க்கும் இந்த திட்டங்கள் நிறைவடையும். சன்னிதான மேம்பாட்டுக்காக முதல் கட்டமாக 2022-27-க்குள் ரூ.600.47 கோடியும், இரண்டாம் கட்டமாக 2028-33-க்குள் ரூ.100.02 கோடியும், மூன்றாம் கட்டமாக 20234-39-க்குள் ரூ.77.68 கோடியும் ஒதுக்கப்படும்.
பம்பாவைப் பொறுத்தவரை, ரூ.207.97 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். மலையேற்றப் பாதையை மேம்படுத்த ரூ.47.97 கோடி ஒதுக்கப்பட இருக்கிறது. ஒட்டுமொத்தமாக சன்னிதானம், பம்பா மற்றும் மலையேற்றப் பாதைகள் ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக ரூ.1,033.62 செலவிடப்பட இருக்கிறது.
எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டே இந்துக்களின் வாக்குகளை ஈர்க்கும் நோக்கில் இந்த சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூறுவது தவறு. இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி. அதேபோல், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சிறுபான்மையினருக்கான நிகழ்ச்சி ஒன்றை கேரள அரசு நடத்தும் என்று கூறுவதும் உண்மையல்ல. சிறுபான்மையினருக்கான நிகழ்ச்சிகள் துறைசார்ந்த முறையில் நடத்தப்படும். ஆனால், வேண்டுமென்றே சிலர், தவறான தகவல்களைப் பரப்புவதற்காக அவ்வாறு கூறுகின்றனர்” என தெரிவித்தார்.