சென்னை: அரசு பள்ளியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நிலையில், மாவட்ட அமைச்சர்கள் குறுநில மன்னர்கள் போல் செயல்படுவதா? என தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி மற்றும் ஆத்தூரில் உள்ள அரசு பள்ளிகளில் தன்னுடைய பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். அந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பாட்டுப் பாடி வாழ்த்து தெரிவிக்க நிர்ப்பந்தம் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
அரசு பள்ளிகளில் கல்வியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க முடியாத மாநில அரசு, அமைச்சர்களின் தற்புகழ்ச்சிக்கு இடம் கொடுப்பது சர்வாதிகாரத்தின் உச்சகட்டம். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு இந்த விவகாரம் தெரியுமா? அவரின் ஒப்புதலோடு தான் பள்ளி மாணவர்கள் பிறந்த நாள் பாடலை பாடினார்களா?
மாவட்ட அமைச்சர்கள் குறுநில மன்னர்களாக செயல்படுவதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதிக்கிறாரா? அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை பதவி விலக வேண்டும் என அன்பில் மகேஸ் கோரிக்கை விடுக்க வேண்டும் அல்லது தன் துறையை தன்னால் நிர்வகிக்க முடியவில்லை என்று ஒப்புக்கொண்டு அன்பில் மகேஸ் பதவி விலக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.