உதம்பூர்: ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.
ஜம்முவின் உதம்பூர், தோடா மற்றும் கதுவா மாவட்டங்களை இணைக்கும் சந்திப்பு பகுதியான உதம்பூரின் பசந்த்கர் பகுதியில், உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் நேற்று மாலை பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த மூன்று முதல் நான்கு பயங்கரவாதிகள் அப்பகுதியில் சிக்கியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. தற்போது தோடா-உதம்பூர் எல்லை அருகே பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தீவிர தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர்.
பசந்த்கர் பகுதியில் அடிக்கடி பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் நடந்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் ஜம்மு – காஷ்மீரில் நடக்கும் இரண்டாவது பெரிய என்கவுன்டர் இதுவாகும்.
முன்னதாக, கடந்த வாரம் குல்காம் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது ராணுவத்தின் ஜூனியர் கமிஷன் அதிகாரி உட்பட இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த என்கவுன்ட்டரில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது.