சென்னை: காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரை நிறுத்த வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று பேரணி நடைபெற்றது. ஹமாஸ் இயக்கத்தை அழிப்பதுதான் தன்னுடைய நோக்கம் என்று அறிவித்து, காசா மீதான போரைத் தொடங்கிய இஸ்ரேல் அரசு, தற்போது காசாவை முழுமையாக கைப்பற்றுவதுதான் தன்னுடைய நோக்கம் என்று வெளிப்படையாக அறிவித்து போரை நீட்டித்து வருகிறது.
இதனால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரைத் தடுக்க வலியுறுத்தி, சென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று பேரணி நடைபெற்றது. புதுப்பேட்டை லேங்க்ஸ் தோட்டச் சாலையில் தொடங்கிய பேரணி எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நிறைவடைந்தது.
தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்எச் ஜவாஹிருல்லா, விசிக தலைவர் திருமாவளவன், மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி, மதிமுக பொருளாளர் மு.செந்திலதிபன், மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ பீமாராவ், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர்கு.ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன், இந்தியமாதர் தேசிய சம்மேளன செயலாளர் சாந்தி, எஸ்டிபிஐ தேசிய பொறுப்பாளர் தெகலான் பாகவி, இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் பேசினர்.