திருச்சி: தவெக தலைவர் விஜய் தனி விமானம் மூலம் இன்று காலை திருச்சிக்கு வருகை புரிந்தார். பின்னர், அவர், நாகை பிரச்சாரத்திற்கு கருப்பு காரில் சென்றார். நாகை, திருவாரூர் பிரச்சாரத்தை முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு இந்த விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார்.
கடந்த செப்.13-ம் தேதி திருச்சியில் பிரச்சாரம் துவங்குவதற்காக தவெக தலைவர் விஜய் திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது தடுப்புக் கட்டைகளை உடைத்துக் கொண்டு தவெக தொண்டர்கள் உள்ளே புகுந்தனர்.
இவர்களை போலீஸாரும், மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினரும் பெருமுயற்சிக்கு பிறகு தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்களோ விஜய்யின் பிரச்சார வாகனத்தை சூழ்ந்துக் கொண்டனர். இதனால் விமான நிலையத்தில் 2 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்நிலையில் இன்று (20-ம் தேதி) விஜய் நாகையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். நேற்றிரவு வரை அவர் எப்படி நாகை வருகிறார் என்பது பரம ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவு 2 மணிக்கு தனி விமானம் மூலம் விஜய் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோரப்பட்டது. அதற்கு உடனடியாக அனுமதியும் வழங்கப்பட்டது.
அதன்படி இன்று காலை 9.15 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு விஜய் வருகை தந்தார். சரியாக 9.30 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார். அவருக்காக ஒரே மாடலில் இரண்டு கருப்பு கார்கள், இரண்டு வெள்ளை கார்கள் என நான்கு கார்கள் தயார் நிலையில் நின்றன.
ஒரு கருப்பு காரில் விஜய் ஏறிச்சென்றார். மற்ற கார்களில் அவரது பாதுகாவலர்கள் மற்றும் பவுன்சர்கள் சென்றனர்.விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விஜய், புதுகை தேசிய நெடுஞ்சாலை- துவாக்குடி புறவழிச்சாலை வழியாக தஞ்சை நெடுஞ்சாலையை அடைந்து அதன்வழியாக நாகையை நோக்கி செல்கிறார்.
கடும் கெடுபிடி: கடந்த கால அனுபவங்கள் காரணமாக திருச்சி விமான நிலையத்தில் தவெக தொண்டர்கள் ஒருவர் கூட அனுமதிக்கப்படவில்லை. இன்று காலை விமான நிலையத்திற்கு வந்த பயணிகள், பொதுமக்கள் என அனைவரும் விமான நிலைய நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு கடுமையான தணிக்கைக்கு பிறகே விமான நிலைய வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
காத்திருக்கும் விமானம்: திருச்சி விமான நிலையத்திற்கு விஜய் வந்த சார்டர்ட் விமானம், அவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. திருச்சியில் இருந்து அவர் கிளம்பிச் சென்றபிறகு இங்கேயே வெயிட்டிங்கில் இருக்கிறது. இன்று நாகை, திருவாரூர் பிரச்சாரம் முடித்துவிட்டு திரும்பும் விஜய், இரவு 10 மணிக்கு இந்த விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார்.