புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் காங்கிரஸ் ஆதரவு வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாக புகார் கூறினார்.
வாக்கு மோசடி செய்பவர்களையும் இந்திய ஜனநாயகத்தை அழிப்பவர்களையும் தலைமை தேர்தல் ஆணையர் பாதுகாப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் உ.பி.யின் பிரயாக்ராஜை சேர்ந்த அஞ்சனி மிஸ்ரா என்பவர் கூறுகையில், “ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பில் எனது செல்போன் எண் காட்டப்பட்டதால் வியப்பு அடைந்தேன். இந்த எண்ணை நான் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்துள்ளேன். வாக்காளர் பெயரை நீக்க நான் விண்ணப்பம் ஏதும் அளிக்கவில்லை.
அப்படியிருக்கையில் எனது செல்போன் எண் காட்டப்பட்டது எனக்கு வியப்பாக இருந்தது. ஆனால் அதன் பிறகு எனக்கு இடைவிடாமல் அழைப்புகள் வருகின்றன. இதனால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். இது தொடர்பாக காவல் துறையை அணுக திட்டமிட்டுள்ளேன்” என்றார்.