துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை (செப்.21) பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன. இந்த தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடும் இரண்டாவது ஆட்டமாக இது அமைந்துள்ளது.
இந்நிலையில், நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று ஓமன் அணி உடனான லீக் ஆட்டத்தில், பீல்டிங் செய்த போது அவர் தலை பகுதியில் காயமடைந்தார். அதன் பின்னர் களத்தில் இருந்து அக்சர் படேல் பெவிலியன் திரும்பினார்.
இந்த ஆட்டத்தில் ஒரு ஓவர் மட்டுமே வீசிய அக்சர், 4 ரன்களை கொடுத்திருந்தார். அதேபோல 13 பந்துகளில் 26 ரன்களை அவர் விளாசினார். இந்திய அணியின் மிடில் ஆர்டர் நம்பிக்கையாகவும், மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராகவும் அக்சர் படேல் விளையாடுகிறார். பீல்டிங்கிலும் துல்லியமாக செயல்படுவார்.
இந்நிலையில், ஓமன் உடனான ஆட்டத்தில் காயமடைந்த அவர், நாளை நடைபெறும் பாகிஸ்தான் உடனான ‘சூப்பர் 4’ சுற்றில் விளையாடுவாரா என்பது நிச்சயமில்லாத வகையில் அமைந்துள்ளது. அவர் இல்லாத பட்சத்தில் சுழலுக்கு சாதகமான துபாய் ஆடுகளத்தில் வருண் மற்றும் குல்தீப் ஆகியோரை தவிர்த்து மூன்றாவது சுழற்பந்து வீச்சாளரை இந்திய அணி பயன்படுத்துமா என்பதும் சந்தேகமே.
பாகிஸ்தான் உடனான லீக் ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி, 18 ரன்கள் மட்டுமே கொடுத்து, 2 விக்கெட்டுகளை அக்சர் படேல் கைப்பற்றி இருந்தார். அந்த போட்டியில் ஒரு கேட்ச்சும் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘இப்போதுதான் அக்சர் படேலை நான் பார்த்தேன். அவர் இந்த தருணம் நலமாக உள்ளார். நாங்கள் பாகிஸ்தான் உடனான ஆட்டத்துக்கு தயாராக உள்ளோம்’ என இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி.திலீப் கூறியுள்ளார்.