ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஸ்ரீநகரை சேர்ந்தவர் யாசின் மாலிக் (59). கடந்த 1977-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எப்) என்ற தீவிரவாத அமைப்பை அவர் தொடங்கினார். பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டார்.
கடந்த 1989-ம் ஆண்டு டிசம்பரில் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் முப்தி முகமது சையதுவின் மகள் ரூபியாவை கடத்தினார். கடந்த 1990-ம் ஆண்டு ஸ்ரீநகரில் ஜேகேஎல்எப் நடத்திய தாக்குதலில் 4 விமானப்படை வீரர்கள் உயிரிழந்தனர்.
கடந்த 1994-ம் ஆண்டு ஆயுத போராட்டத்தை கைவிட்ட யாசின் மாலிக் ஜனநாயக பாதைக்கு திரும்பினார். அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்டார்.
தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்த வழக்கில் கடந்த 2022-ம் ஆண்டில் டெல்லி நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. ரூபியா கடத்தல் வழக்கு, விமான படை வீரர்கள் கொலை உட்பட பல்வேறு வழக்குகள் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் காஷ்மீரை சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவரும், ரூபியாவின் சகோதரியுமான மெகபூபா முப்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: வன்முறையை கைவிட்டு அமைதி பாதைக்கு திரும்பிய யாசின் மாலிக் மீது 32 தடா வழக்குகள் நிலுவையில் உள்ளன. அனைத்து வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. முந்தைய பாஜக, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அவர் கைது செய்யப்படவில்லை. ஆனால் கடந்த 2019-ம் ஆண்டில் நிலைமை தலைகீழாக மாறியது.
அமைதி பாதைக்கு திரும்பிய யாசின் மாலிக் மீது தீவிரவாதி என்ற முத்திரை குத்தப்பட்டது. தற்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. நீண்ட காலமாக அவர் அமைதி வழியை பின்பற்றி வருகிறார். மனிதாபிமான அடிப்படையில் அவரது வழக்குகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவர் மீது கருணை காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.