கடைசி இரண்டு படங்கள் எதிர்பாராத வரவேற்பை பெறாத நிலையில், அடுத்து ஒரு வெற்றியை பதிவு செய்தாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கவினின் புதிய படம் ‘கிஸ்’. நடன கலைஞர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகியுள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
காதல் என்ற வார்த்தையை கேட்டாலே எரிச்சலாகும் கிடார் கலைஞர் நெல்சன் (கவின்). எதிர்பாராத ஒரு தருணத்தில் பார்க் ஒன்றில் சந்திக்கும் ஒரு பெண்ணின் மூலம் அவருக்கு ஒரு பழங்கால புத்தகம் கிடைக்கிறது. அந்த புத்தகம் கைக்கு வந்தபிறகு நெல்சனுக்கு ஒரு விசேஷ சக்தி கிடைக்கிறது. யாராவது முத்தமிட்டுக் கொள்வதை கண்டால் அவர்களின் எதிர்காலம் நெல்சனின் மனக்கண்ணில் விரிகிறது. இதனால் சில காதல் ஜோடிகளின் எதிர்காலத்தை தெரிந்து கொண்டு பிரித்து விடுகிறார்.
அந்தப் புத்தகத்தை திருப்பி கொடுப்பதற்காக அந்த பெண்ணை தேடிச் செல்கிறார். சாரா வில்லியம்ஸ் (ப்ரீத்தி அஸ்ரானி) என்ற அந்த பெண் நடனப் பள்ளி நடத்தி வருகிறார். அவர் மீது காதல் வயப்படும் நெல்சனுக்கு ஒரு கட்டத்தில் தன்னுடைய எதிர்காலமே கண் முன்னால் வருகிறது. எதிர்கால அசம்பாவிதங்களை அவரால் தடுக்க முடிந்ததா? நாயகியுடன் அவர் இணைந்தாரா என்பதுதான் ‘கிஸ்’ படத்தின் திரைக்கதை.
தனது முதல் படத்திலேயே வித்தியாசமான கதைக்களத்தை எடுத்துக் கொண்டு ‘அட’ போட வைத்துள்ளார் இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன். தமிழில் ஃபேன்டசி படங்கள் மிகக் குறைவு என்னும் சூழலில், அப்படியான ஒரு கதைக்களத்தை எடுத்துக் கொண்டு அதை முடிந்தவரையில் ஜாலியாக சொல்லவும் முயற்சி செய்திருக்கிறார்.
படத்தின் தொடக்கத்தில் விஜய் சேதுபதியின் குரலில் வரும் மன்னர் கால கதை, ஹீரோவின் குடும்பம் பற்றிய பின்னணி, ஹீரோவின் கைக்கு புத்தகம் கிடைப்பதும் அதை தொடர்ந்து வரும் காட்சிகளும் என படத்தின் முக்கிய காட்சிகள் சுவாரஸ்யமாகவே எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக ஆர்ஜே விஜய், விடிவி கணேஷ் வரும் காட்சிகள் படம் முழுக்க கலகலப்புக்கு உத்தரவாதம் தருகின்றன.
ஹீரோயின் என்ட்ரிக்கு பிறகு ரொமான்ஸ் மோடுக்கு மாறும் படம், இடைவேளையில் ஆடியன்ஸை சீரியஸ் மனநிலைக்கு கொண்டு வந்து அடுத்து என்ன நடக்கும் என்று ஆர்வத்தை தூண்டுகிறது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு அந்த ஆர்வத்தை தக்க வைக்க முடியாமல் திணறுகிறது படம். முதல் பாதியில் ஆங்காங்கே படத்தின் உணர்வோடு ஒன்ற உதவிய எமோஷனல் காட்சிகளும் இரண்டாம் பாதியில் நீர்த்துப் போய் விடுகின்றன. அதற்காக வைக்கப்பட்ட காட்சிகளும் பெரிதாக கைகொடுக்கவில்லை.
நாயகனாக கவின். தான் நடிக்கும் படங்களில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் தன்னுடைய நடிப்பில் ஒவ்வொரு படத்திலும் மெருகேறி வருகிறார். ‘ஸ்டார்’, ‘ப்ளடி பெக்கர்’ படங்களைத் தொடர்ந்து இதிலும் நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. குறிப்பாக எமோஷனல் காட்சிகளில்.
‘அயோத்தி’ கதாபாத்திரத்துக்கு முற்றிலும் நேரெதிராக மாடர்ன் பெண்ணாக ப்ரீத்தி அஸ்ரானி. வெறுமனே அழகை வைத்து ஒப்பேற்றாமல் நடிக்கவும் செய்கிறார். ஆர்.ஜே.விஜய், தேவயானி, ராவ் ரமேஷ் உள்ளிட்டோரு படத்துக்கு தேவையான பெர்ஃபாமன்ஸை தந்திருக்கின்றனர்.
படம் முழுக்க தன்னுடைய ஒன்லைனர்களால் கலகலக்க வைக்கிறார் விடிவி கணேஷ். அவர் வரும் காட்சிகள் அனைத்துமே சரவெடியாய் இருக்கிறது. குறிப்பாக க்ளைமாக்ஸுக்கு முன்பாக திருமண மண்டபத்தில் நடக்கும் ஒரு காட்சியில் அரங்கம் முழுக்க சிரிப்பலை தான்.
ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு ஒரு ரொமான்ஸ் படத்துக்கே உரித்தான ஃப்ரெஷ் ஆன உணர்வை கடத்துகிறது. ஜென் மார்ட்டின் பின்னணி இசை படத்துக்கு பலம். ஸ்பீட் பிரேக்கர்களாக வரும் பாடல்கள் ஓகே ரகம்.
நாயகனுக்கு நாயகிக்குமான காதல் காட்சிகளில் வலுவில்லை. முதலில் இருவரும் காதலிக்கவே ஆரம்பிக்கவில்லை என்ற நிலையில்தான் பிரிகின்றனர். இதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்ற கேள்வி எழுவதை தடுக்கமுடியவில்லை. கவுசல்யா கதாபாத்திரத்துக்கான பின்னணியும், காரணமும் அழுத்தமாக சொல்லப்படவில்லை. க்ளைமாக்ஸை இவ்வளவு அவசரமாக முடிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.
மொத்தத்தில் லாஜிக்கை பற்றி கவலைப்படாமல் ஒரு ஜாலியான படத்தை பார்த்து வர விரும்புபவர்கள் ஒருமுறை முயற்சி செய்யலாம்.