புதுடெல்லி: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கையை சித்தரிக்கும் ‘அஜய் எ அன் டோல்டு ஸ்டோரி ஆப் யோகி’ எனும் பாலிவுட் திரைப்படம் நேற்று வெளியானது. இதைக் காணத் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ எனும் கோஷத்துடன் பரவசப்படுகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நேற்று வெளியான அஜய் படத்தின் முதல் காட்சியை பார்ப்பதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். டிக்கெட் வாங்கிய அவர்கள் அரங்குகளில் நுழைந்தவுடன் ’ஜெய் ஸ்ரீராம்’, ’யோகி, யோகி’ எனக் கோஷங்களை எழுப்பினர்.
முதல்வர் யோகியின் ஆளுமை மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை பெரிய திரையில் பார்ப்பதற்காக, அவரது ஆதரவாளர்கள் திருவிழாவுக்கு செல்வது போல திரண்டனர். படம் முடிந்ததும் அரங்கை விட்டு வெளியேறியபோதும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்றும் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்றும் கோஷமிட்டனர்.
கோரக்நாத் மடத்தில் ஒரு துறவியாக, எளிமையான வாழ்க்கையைத் தொடங்கியவர் அஜய். பிறகு அரசியலில் நுழைந்து, உத்தர பிரதேசத்தின் முதல்வராக உயர்ந்தது வரை திரைப்படம் சித்தரிக்கிறது. இந்தப் படத்தை ரவீந்திரா கவுதம் இயக்கி உள்ளார். இத்திரைப்படம் முதல்வர் யோகியின் கடுமையான ஒழுக்கம், அவர் எடுத்த தைரியமான முடிவுகள் மற்றும் பொது சேவை மனப்பான்மையை சுருக்கமாகச் சித்தரிக்கிறது.
வாராணசியில் படம் பார்த்த பார்வையாளர்கள் கூறுகையில், ‘ஒருவர் கடினமான சூழ்நிலைகளில் கூட மன உறுதி மற்றும் அர்ப்பணிப்பு மூலம் எவ்வாறு மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை இந்தப் படம் எடுத்துரைக்கிறது. யோகியின் பக்தி, போராட்டம் மற்றும் சேவை மனப்பான்மையை நெருக்கமாகக் காண வாய்ப்பு கிடைத்தது’ என்றனர்.
ஆனந்த ஜோஷி.. முதல்வர் யோகியின் நெருக்கமான நண்பர் சாந்தனு குப்தா 2017-ல் எழுதிய, ‘தி மாங்க் ஹு பிகம் சீப் மினிஸ்டர்‘ என்ற நூலை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், யோகியாக ஆனந்த ஜோஷி நடித்துள்ளார்.