நாகப்பட்டினம் / திருவாரூர்: நாகை, திருவாரூரில் விஜய் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது, விஜய் பிரச்சார வாகனத்தை யாரும் பின்தொடர வேண்டாம் என்று தவெக வேண்டுகோள் விடுத்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கடந்த 13-ம் தேதி திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்கினார். தொடர்ந்து, அரியலூரில் பிரச்சாரம் செய்த விஜய், நள்ளிரவு நேரமானதால், பெரம்பலூர் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தார்.
ஒரே நாளில் 3 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியாததால், விஜய் சுற்றுப்பயணத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி, ஒரு நாளில் 2 மாவட்டங்களில் மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று (செப்.20 திருவாரூர், நாகையில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நாகை புத்தூர் அண்ணா சிலை சந்திப்பில் காலை 11 மணிக்கும், திருவாரூர் நகராட்சி அலுவலகம் அருகே தெற்கு வீதியில் பிற்பகல் 3 மணிக்கும் பொதுமக்கள் மத்தியில் விஜய் உரையாற்ற உள்ளார்.
அனுமதி அளிப்பதில் தாமதம்: இதனிடையே, விஜய் சுற்றுப்பயண நிகழ்ச்சிக்கு போலீஸார் பல்வேறு நிபந்தனைகள் விதிப்பதாகவும், அனுமதி அளிக்க தாமதிப்பதாகவும், உயர் நீதிமன்றத்தில் தவெக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் கூட்டத்துக்கு வர வேண்டாம் என எல்லோருக்கும் முன்மாதிரியாக விஜய் தெரிவிக்கலாமே என்றும், நிகழ்ச்சிக்கு வரும் தொண்டர்களை ஏற்பாடு செய்பவர்கள்தான் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்களிடம் இருந்து உரிய இழப்பீட்டு தொகையை வசூலிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
இதையடுத்து, விஜய் சுற்றுப்பயணம் தொடர்பாக கட்சித் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும்போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டு செல்லும்போதும், அவரது வாகனத்தை யாரும் வாகனங்களில் பின் தொடர வேண்டாம். பொதுமக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தின் அருகில் அரசு, தனியார் கட்டிடங்கள், சுவர்கள், மரங்கள், மின் விளக்கு கம்பங்கள், வாகனங்கள், கொடி கம்பங்கள், சிலைகள் இருந்தால் அதன் அருகில் செல்வதையோ, ஏறுவதையோ தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்கள், முதியோர்கள், பள்ளி சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை தவிர்க்க வேண்டும். பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். காவல் துறை விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.