சென்னை: திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், படப்பிடிப்பில் இருந்தபோது மயங்கி விழுந்தார்.
அதைத்தொடர்ந்து, பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு காலமானார். இதையடுத்து அவரது உடல், வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு நள்ளிரவு முதல், அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், விசிக தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன், நடிகர்கள் சத்யராஜ், பாக்யராஜ், ராதாரவி, தனுஷ், சிவகார்த்திகேயன், சூரி, சண்முகப்பாண்டியன் உள்ளிட்ட நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், மாரி செல்வராஜ், சின்னத்திரை கலைஞர்கள், திரைப்பிரபலங்கள், நண்பர்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் வீட்டில் இருந்து வளசரவாக்கம் மின் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச் சடங்குக்குப் பின் தகனம் செய்யப்பட்டது.

அவரது உடலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர்
கமல்ஹாசன் எம்.பி. அஞ்சலி செலுத்தினார்.
ரோபோ சங்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் மு.க,ஸ்டாலின் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: திரைக்கலைஞர் ரோபோ சங்கர் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் தொடங்கி, சின்னத்திரை, வெள்ளித்திரை என விரிந்து, தமிழக மக்களை மகிழ்வித்தவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, தவெக தலைவர் விஜய், வி.கே.சசிகலா, நடிகர் சிலம்பரசன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.